கடலூர்:
லோக்பால் அமைப்பு ஊராட்சி முதல் மக்களவை வரை அனைத்து நிலையிலும் அமைய வேண்டும் என்று, தமிழ்நாடு லோக்பால் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் அமைப்பாளர் பேராசிரியர் இரா. நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
42 ஆண்டுகளாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாதது மக்களை ஏமாற்றுவதாக அமையும். தற்போது மசோதா நிறைவேற்றப்படும் என்று பிரதமர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். ஜனநாயகத்தைக் காக்க அரசியல், நிர்வாகம், நீதித்துறையில் மாற்றம் தேவை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில், சட்டம் நாட்டை ஆள வேண்டும். லோக்பால் அமைப்பு ஊராட்சி முதல் மக்களவை வரை அனைத்து நிலையிலும் அமைய வேண்டும். லோக்பால் அமைப்பு தன்னாட்சி பெற்றதாக அமைய வேண்டும். ஊழல் புரியும் அரசியல்வாதி, அதிகாரி, நீதிபதிகள் யாராக இருந்தாலும் பதவி நீக்கம் செயயப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். சொத்துக்களை முடக்க வேண்டும். லோக்பாலில் இடம்பெறுவோர் ஊழல் புரிந்தால் ஒரு மாதத்தில் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் எதிர்ப்புப் போராளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் உயிர் பறிக்கப்பட்டால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு, சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டால் அதன் மதிப்பைப்போல் 10 மடங்கு தரவேண்டும். ஊழலைக் கட்டுப்படுத்த அறக்கல்வி போதிக்க வேண்டும். விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அரசியல் வாதிகளுக்குக் கல்வித் தகுதி விதிக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவித்த ஒருங்கிணைந்த கிராம முன்னேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். லோக்பால் ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர் அருணாச்சலம், சமூக ஆர்வலர் ஆர்.கணபதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக