உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 21, 2011

பயறு வகை சேமிப்பில் புதிய தொழில்நுட்பம்


கடலூர்: 

           தமிழகத்தில் 2009-10ம் ஆண்டில் உணவு தானியங்கள் உற்பத்தி இலக்கு 110.5 லட்சம் டன்கள். ஆனால் 95 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. பயறு வகைகள் 6.90 லட்சம் டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டு, 4.50 லட்சம் டன்கள் மட்டுமே உற்பத்தியாயின. 

                2010-11-ம் ஆண்டில் 45.5 லட்சம் ஹெக்டேரில் 112 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 12 லட்சம் ஹெக்டேரில் 7.50 லட்சம் டன் பயறு வகை உற்பத்தி செய்ய இலக்கு நிர்யணயிக்கப்பட்டது.  பயறு வகை உற்பத்தி, தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் உற்பத்தியைப் பெருக்க பயறு வகைகளை ஊடுபயிராக அல்லாமல் தனிப் பயிராக சாகுபடி செய்ய இந்தாண்டில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.


                  ஈடுசெய்ய முடியாத மண் வளச் சீர்கேட்டை மேம்படுத்துவதில் பயறு வகைப் பயிர்களின் பங்களிப்பு அளவில்லாதது.  அன்றாட உணவில் பயறு வகை பருப்புகள் ஒரு நபர் 70 கிராம் உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒரு நபர் 40 கிராமுக்கும் குறைவாகவே உட்கொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல், வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. பயறு வகைகள் எளிதில் பூச்சித் தாக்குதலுக்கு இலக்காகும் தன்மை கொண்டவை.

               எனவே பயறு வகைகள் சேதமடைந்து விடாதபடி பாதுகாக்க அறுவடைக்குப் பிந்திய நேர்த்தியில், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.  பயறு வகைகளில் துவரை, உளுந்து பயிர்கள் 80 சதவீதம் விதை முற்றியதும், அறுவடை செய்யப்பட வேண்டும். சில நாள்கள் வைத்து இருந்து, செடிகளில் இருந்து விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். பாசிப்பயறு தட்டைப் பயறு போன்றவற்றை, நன்கு முற்றியபின் அவற்றை பறித்துக் காயவைத்து விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். 

            உணவுக்கான பயறு வகைகளைச் சேமிக்க, நன்கு காயவைக்க வேண்டும். ஈரப்பதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை இளம் வெயிலில் உலர்த்தி சேமித்து வைக்க வேண்டும். உளுந்து, பச்சைப் பயறு வகைகள் உடைத்து வைத்தால், பூச்சிகளால் அதிகம் சேதம் ஏற்படாது. கெடாமல் இருக்க விஷ மருந்துகளை கலக்கக்கூடாது. மூட்டைகளை பரண் மேல் மூங்கில் பாய் அல்லது பாலித்தீன் விரிப்பில் சேமிக்க வேண்டும்.  

              விதைக்கான பயறு வகைகளில் மாலத்தீயான் 4 சதவீதம் தூள் 100 கிலோ விதைக்கு ஒரு கிலோ வீதம் கலந்து, பாலித்தீன் உள்பூச்சு உள்ள சாக்குகளில் சேமிக்கவும். 100 கிலோ விதைக்கு அரைக் கிலோ தாவர எண்ணெய் பசை அல்லது ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் கலந்து பாதுகாக்கலாம்.  சேமித்து வைக்கப்பட்ட பயறு வகைகளுக்கு ஈ.டி.பி. கலவைப் புகையிடுதல், உலோகக் குதிரில் உறுதியான களஞ்சியங்களில் சேமித்தல், 100 கிலோவுக்கு 15 கிராம் நொச்சி இலைத் தூள், சுண்ணாம்புத் தூள் போட்டும் சேமிக்கலாம். தாவர எண்ணெய்களை பூசுதல் தீங்கற்றது. விஷத் தன்மை அற்றது.

                 உடைத்து பருப்பாக்கும் போது அவற்றை அகற்றுவது எளிதாக இருக்கும். வண்டுகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பாக அமையும். சிக்கனமானது. செலவு கட்டுபடியாகக் கூடியது. விரைவில் உலர்ந்துவிடும். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். அவை எங்கும் கிடைக்கக் கூடிவை.  

                சிமென்ட் கான்கிரீட் தரைமீது, அல்லது பாலித்தீன் பேப்பரை பரப்பி, அதன்மீது 100 கிலோ விதைக்கு 500 மில்லி எண்ணெய் கொண்டு, அனைத்து பயறுகள் மீதும் சீராகப்படும்படிக் கலக்கி, சற்றே ஆறவைத்த பின் சேமிக்கலாம். எண்ணெய் பூசப்பட்ட  பயறுகளை டப்பா, மண் பாண்டம், மூங்கில் கூடை போன்ற வற்றில் 5, 6 மாதங்கள் வரை சேமிக்கலாம் என வேளாண் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior