கடலூர்:
அனைத்து நிறுவனங்களின் தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வலியுறுத்தினார்.
இ.எஸ்.ஐ. கார்பரேஷன் நிறுவனத்தின் வைரவிழாவை முன்னிட்டு, கடலூரில் உள்ள தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுக்கு, விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடந்தது.
விழாவை மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்துப் பேசியது:
இ.எஸ்.ஐ. வசதிகளை பயன்படுத்திக் கொள்ளத் தகுதியான தொழில் நிறுவனங்கள் பல, கடலூர் மாவட்டத்தில் உள்ளன. மாத வருவாய் ரூ. 12 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும், இ.எஸ்.ஐ. மருத்துவ வசதிகளை அளிக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு இ.எஸ்.ஐ. திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இயந்திரங்களை பயன்படுத்தும் நிறுவனங்களில் 10 நபர்களும், இயந்திரங்களை பயன் படுத்தாத நிறுவனங்களில் 20 நபர்களும் வேலையில் இருந்தால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் மனைவியருக்கு மகப்பேறு உதவிகள், தொழிலாளர்கள் காயம் அடையும் போதும், உடல் நலம் பாதிக்கப்படும் போதும், மரணம் அடைந்தாலும் உதவிகள் வழங்கப் படுகிறது. இதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி நாராயணசாமி, சென்னை மண்டல இ.எஸ்.ஐ. கூடுதல் ஆணையர் கே.பத்மஜா நம்பியார், இயக்குநர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக