கண்ணீர் அஞ்சலி !

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் ரவிச்சந்திரன் நேற்று இரவு மருத்துவமனையில் காலமானார்.
பழம்பெரும் நடிகரான அவர், டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த "காதலிக்க நேரமில்லை" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுக படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதிலும் அந்தபடத்தில் வந்த "விஸ்வநாதன் வேலை வேண்டும்..." , "உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா..." உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். இவர் நடித்த "அதே கண்கள்", "இதயகமலம்", "கெளரி கல்யாணம்", "குமரிப்பெண்", "உத்தரவின்றி உள்ளே வா" உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.

தனக்கென தனி பாணியைப் பின்பற்றிய ரவிச்சந்திரனின் ஸடைல், அப்போதைய கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளை வெகுவாய்க் கவர்ந்தது. பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் "ஊமை விழிகள்" படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதில் வில்லனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்தார்
.சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவிச்சந்திரனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.
இதனால் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிசிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று (26/07/2011) நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக