உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

தமிழகத்தில் 82 லட்சம் வீடுகளுக்கு இலவச சி.எப்.எல். பல்புகள்: சிதம்பரத்தில் சோதனை முயற்சி

             மின் சேமிப்பு திட்டப்படி, தமிழகத்திலுள்ள 82 லட்சம் வீடுகளில், குண்டு பல்புகளை மாற்றி, சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

             முதற்கட்டமாக, ஐந்து நகராட்சிகளில் அமலுக்கு வந்துள்ளது. மின் சேமிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளிலும், குண்டு பல்புகளை மாற்றி, சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், குண்டு பல்புகளை மாற்றி, இலவசமாக 11 வாட் சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படும். குண்டு பல்புகள் இல்லாத வீடுகளுக்கு குறைந்த விலையில், 15 ரூபாய்க்கு சி.எப்.எல்., பல்பு தரப்படும். 

                முதற்கட்டமாக இத்திட்டம், விழுப்புரம் மின் மண்டலத்தில், கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் மற்றும் நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளில் அமலுக்கு வந்துள்ளது. 

                  சோதனை முயற்சியாக, சிதம்பரத்திற்குட்பட்ட முட்டம் ஊரில், 296 வீடுகளுக்கு இலவச சி.எப்.எல்., பல்புகள் தரப்பட்டு, தினமும் 29 வாட் மின் சேமிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பல்புகள் சப்ளை செய்ய, உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த "சில்வர் பேர் அட்வைசர்' என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய உயரதிகாரி கூறியது: 

              குண்டு பல்புகளின் 60 வாட்ஸ் ஒளிக்கு நிகராக, 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பும் ஒளி தரும்; இதனால், ஒரு பல்புக்கு 49 வாட்ஸ் சேமிக்கப்படும். இதே போல், 40 வாட்ஸ் டியூப் லைட்டுக்கு ஈடாக, 11 வாட்ஸ் சி.எப்.எல்., ஒளி தரும்; இதில், 29 வாட்ஸ் சேமிக்கப்படுகிறது. அதனால், குண்டு பல்புகள் மற்றும் டியூப் லைட்களை மாற்றி, சி.எப்.எல்., பல்புகளாக்கும், "பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 

                தமிழகத்தில், 1.4 கோடி வீடுகளில், முதற்கட்டமாக 84 லட்சம் வீடுகளுக்கு அமலாகும். இதன் மூலம், தினமும் 500 முதல் 600 மெகாவாட் மின் பயன்பாடு சேமிக்கப்படும். மத்திய மின்துறை அமைச்சகத்தின், எரிசக்தி திறனூக்க செயலக (பி.இ.இ.,) உதவியுடன் அமலாகிறது. கடைகளில், 60 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கும் தரமான சி.எப்.எல்., பல்புகளை, 15 ரூபாய்க்கு மின் வாரியம் வழங்க முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
       
               சி.எப்.எல்., பல்புகளை மாற்றிய வீடுகளில், குண்டு மற்றும் டியூப் லைட்களுக்கு தடை விதிக்கப்படும். புதிய இணைப்புகள் பெறுவோர், சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்த, நிபந்தனை விதிக்கவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior