திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து மழை கொட்டியது.
இதற்கிடையே திட்டக்குடி அருகே ஆதமங்கலத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவர் தனக்கு சொந்தமான மாடுகளை அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் நேற்று மாலை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில் செல்வராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். துகுறித்து திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா, தாசில்தார் சையத் ஜாபர் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலம் அருகே பொன்னேரி கிராமத்தை சேர்ந்த அருணாசலம் என்பவரது கூரை வீட்டில் இடி-மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் இடி தாக்கியதில் அருணாசலத்தின் மகன் விக்னேஷ் (20) காயம் அடைந்தார். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக