உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

கடலூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி


கடலூர்:
 
           விநாயகர் சதுர்த்தி விரைவில் வரவிருப்பதை முன்னிட்டு, கடலூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  
 
              கடலூர் வண்டிப்பாளையம், மணவெளி ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் ஆண்டு முழுவதும் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் கலையம்சம் நிறைந்த பொம்மைகள் இந்தியா முழுவதும், பல மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.  பொம்மை தயாரிக்கும் இக்குடும்பங்களில் பல, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள், விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் மும்முரமாக ஈடுபடுகின்றன. 
 
              இக்குடும்பங்கள் கடலூரில் சுமார் 10 குழுக்களாகப் பிரிந்து, ஆங்காங்கே சிறிய கீற்றுக் கொட்டகைகளை அமைத்துக் கொண்டு, அவற்றில் விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறார்கள்.  வீடுகளில் பெரிய அளவில் வைத்து பூஜிக்கும் வகையிலும், பொது இடங்களில் பிரமாண்டமான அளவில் வைத்து பூஜிக்கும் வகையிலும், 3 அடி முதல் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை இவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இவற்றின் விலைகள் ரூ. 1000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை இருப்பதாக, பொம்மை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
               விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்படுவது ஐதீகம். எனவே நீர் நிலைகளின் சூழல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருளைக் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருக்கிறது.  எனவே இவர்கள் மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே விநாயகர் சிலைகளைத் தயாரிக்கிறார்கள்.  கடலூரில் விநாயகர் சிலை உருவாக்கப்படும் இடங்கள் ஒவ்வொன்றிலும், இதுவரை நூற்றுக்கணக்கான சிலைகள், மிகச்சிறந்த கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளன. வண்ணங்கள் தீட்டும் வேலைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.  
 
 கடலூர் முதுநகரில் கிழக்கு கடற்கரைச் சாலையோரம் விநாயகர் சிலைகளை உருவாக்கி வரும் மணவெளி சங்கர் (38) இதுபற்றிக் கூறுகையில்,
 
             ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும், குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இது ஒரு கலைத்தொழில். எனவே பல குடும்பங்கள் பாரம்பரியமாக பல்வேறு கலையம்சம் கொண்ட பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.  
 
             விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4 மாதங்கள், பெரும்பாலான குடும்பங்கள் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்றன. எங்களது பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிகளுக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பொம்மை தயாரிக்கும் தொழிலில், ஒத்தாசையாக இருக்கிறார்கள்.  இத்தொழிலில் பெரிதாக வருவாய் ஒன்றும் கிடைக்க வில்லை. கிடைக்கும் சொற்ப வருவாயில் சாப்பிடுகிறோம், குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். விநாயகர் சதுர்த்தி காலங்களில், விநாயகர் சிலைகள் தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்கள் வாங்கவும், கூலியாட்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் ஒவ்வொரு குழுவும் ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்கிறோம். 
 
             எங்களுக்கு எந்த வங்கியும் கடன்தர முன்வருவது இல்லை. ரூ. 1 லட்சத்துக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வீதம் வட்டிக்குக் கடன் வாங்கி, விநாயகர் சிலைகளைச் செய்கிறோம்.  விநாயகர் சதுர்த்தி பொம்மை தயாரிப்புத் தொழிலுக்கு என்று கடன் கேட்டால், அதிக வட்டி கேட்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி முடிந்து கணக்குப் பார்த்தால்தான், என்ன வருவாய் கிடைத்து இருக்கிறது என்று தெரியும். எங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைத்தால், இத்தொழிலை மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செய்வோம் என்றார் சங்கர்.  
 
 
        ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.  அந்த மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும், விநாயகர் பொம்மைகளைத் தயாரிப்போரின் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் நிதரிசனமான உண்மை.
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior