உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 24, 2011

கடலூர் நகராட்சிப் பகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

கடலூர்:

          கடலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள 126 வாக்குச் சாவடிகளில், 20 சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளன என்று கடலூர் நகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். 

இதுபற்றி நகராட்சி ஆணையர் இளங்கோவன் வியாழக்கிழமை கூறியது: 

              இந்தியாவில் முதல் முறையாக தமிழக உள்ளாட்சித் தேர்தலில், புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப் படுகிறது. 29-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். கடலூர் நகராட்சியின் 45 வார்டுகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை. 3 தாழ்த்தப்பட்டோருக்கு பொதுவான வார்டுகள். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

வாக்காளர் பட்டியல்:

              நகராட்சி அலுவலகத்திலும் வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. தேவையான மாற்றங்கள் செய்வதற்கான படிவங்கள் நகராட்சி அலுவலகத்தில் கிடைக்கும். புதிய வாக்காளர்களை இப்போது சேர்க்க முடியாது. 

கடலூர் நகராட்சியில் 

ஆண்கள் 52,179. 
பெண்கள் 53,275. 
மொத்த வாக்காளர்கள் 1,05,456. 

                 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் இலவசமாக வழங்கப்படும். மற்றவர்கள் ஒரு பக்கத்துக்கு ரூ. 5 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் ரூ. 2.25 லட்சம் வரையிலும், உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுவோர் ரூ. 56,250 வரையிலும் செலவு செய்யலாம். பிரசார வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி பெறவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விதிமுறைகள் அனைத்தும் நகராட்சித் தேர்தலுக்கு பொருந்தும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: 

            காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். சுவரொட்டிகள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி இல்லை. 

நகராட்சித் தலைவர் பதவிக்கு டெபாஸிட் தொகை ரூ. 2 ஆயிரம், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 1000. 
உறுப்பினர் பதவிக்கு ரூ. 1000. 
தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 500. 

               தலைவர் தேர்தலுக்கும் உறுப்பினர் தேர்தலுக்கும் தனித்தனி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து விட்டன. அவற்றை பெல் நிறுவனத்தினர் சோதனை செய்து வருகிறார்கள். கடலூர் நகராட்சித் தேர்தலுக்கு 5 உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகள்: ஏற்கெனவே மதுக்கடை ஏலம் எடுத்து பாக்கி வைத்து இருப்பவர்கள் பட்டியலை நகராட்சிக்கு அரசு வழங்கி உள்ளது.

             கடலூர் நகராட்சியைப் பொருத்தவரை சுமார் 10 பேர் அப்பட்டியலில் உள்ளனர். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் கலால் அலுவலகத்தில், தடையில்லாச் சான்று பெறவேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது.   தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 8 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடலூர் நகராட்சிப் பகுதியில் 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். அவற்றில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டு உள்ளன. தேர்தல் பணிகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்படும் என்றார் ஆணையர்.











0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior