கடலூர்:
உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப் படுவார்கள். தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரிக்கை விடுத்தார்.
ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்கப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் பணியில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இப்பணிகளில் அனைத்துத் துறை அலுவலர்களையும் ஈடுபடுத்தி, நல்ல முறையில் தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையச் செயலர் அறிவுறுத்தி உள்ளார். அரசு அலுவலர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பணிகளை, முழுமையான ஈடுபாட்டுடன் கவனித்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் போன்ற தேர்தல் பணிக்கு, அலுவலர்கள் நியமிக்கப்படும்போது, அப்பொறுப்புகளை தவிர்க்க முற்படுவோர், ஏற்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய வாக்காளர் பெயர்:
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து, பெருமளவில் சந்தேகம் எழுப்பப் படுகின்றன. சட்டம் மற்றும் விதிகளின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கு, படிவம் தாக்கல் செய்த நாள் நீங்கலாக, 7 நாள்கள் அறிவிப்புக் காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும். மனுக்களைப் பரிசீலிக்க குறைந்தபட்சக் கால அவகாசமும் தேவைப்படும்.
எனவே சமீபத்தில் பெயர்களைச் சேர்க்க, மனு அளித்தவர்களின் பெயர்களை, உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான 29-9-2011க்கு முன்னால் சட்டப்படி சேர்க்க இயலாது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தகுதிநாள் 1-1-2011 ஆகும். எனவே 1-1-2011க்குப் பிறகு 18 வயது நிறைவடையும் அனைவரும், 24-10-2011 அன்று தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போதுதான், பெயர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறு பெயர்கள் சேர்க்கப்படும் வாக்காளர் பட்டியல்கள் 5-1-2011 அன்றுதான் வெளியிடப்படும். எனவே தற்போது நடைபெறும் தொடர் திருத்தத்தில் அத்தகைய நபர்களின் பெயர்களைச் சேர்க்க இயலாது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக