உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், செப்டம்பர் 28, 2011

தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை

   

          வரும் கல்வியாண்டு (2012-13) முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.  

                 2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளில் இந்த கிரேடு முறை அமலுக்கு வரும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:  

            பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி, அவர்களது சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது.  அந்தக் குழு, தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்  துள்ளது. 

 பரிந்துரை விவரம்: 

             கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் இத்தகைய மதிப்பீட்டு முறையை கட்டாயமாக்கியுள்ளது.  இப்போதுள்ள தேர்வுமுறை, மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாணவர்கள் கணித்துவிடக் கூடிய வகையில் உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் புத்தகங்களைத் தாண்டி வெளியே படிக்க முடியாது.  பொதுத்தேர்வுகள் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வில் தோல்வி பயம் பல தவறான முடிவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.  சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்த மதிப்பீட்டு முறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.  

இரண்டு வகையான மதிப்பீடு:

           கல்வியாண்டுக்குப் பதில் மூன்று பருவ முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த வேண்டும். உடனடி மதிப்பீடு, பருவ மதிப்பீடு என இரண்டு மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  ஒவ்வொரு பருவத்துக்கும் உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்ணும், பருவ இறுதியில் மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்ணும் வழங்கப்பட வேண்டும்.  பாடல்கள், விளையாட்டு, நாடகம், கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், பருவ இறுதியில் நடைபெறும் தேர்வு பருவ இறுதி மதிப்பீட்டிலும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். 

              இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடுகள் வழங்கப்படும். ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி, இ1, இ2 போன்ற கிரேடுகள் உள்ளன. ஒவ்வொரு கிரேடுக்கும் கிரேடு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.  இதில் இ1, இ2 கிரேடுகளைத் தவிர அனைத்து கிரேடுகளுக்கும் கிரேடு புள்ளிகள் வழங்கப்படும்.  மூன்று பருவத்தின் முடிவில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகள் அடிப்படையில் ஆண்டு இறுதியில் மாணவர்களுக்கு கிரேடு மட்டும் வழங்கப்பட வேண்டும். 

              ஒரு பருவத்தில் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் பாடங்கள், அடுத்த பருவத் தேர்வுக்கு வராது. இதனால், ஆண்டுத் தேர்வுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடும்.  ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று முறை மாணவர்களின் திறன் மதிப்பிடப்படும். இதுதொடர்பான அறிக்கை ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும்.  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  கல்லூரிகளில் பின்பற்றப்படும் செமஸ்டர் முறைக்கு எளிமையாக மாறும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்தலாம்.  

                 பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பரிந்துரைகளை ஆராய்ந்தபிறகு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அடுத்தக் கல்வியாண்டில் இருந்தும், 9, 10 வகுப்பு வரை 2013-14 கல்வியாண்டிலிருந்தும் அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது.  முப்பருவ முறையும் அடுத்தக் கல்வியாண்டில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior