நெய்வேலி:
மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் வி.எஸ்.தியாகராஜன் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
மலாய் பல்கலைக்கழகமும், சென்னை அநுராகம் பதிப்பகமும் இணைந்து கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை அண்மையில் மலேசியாவில் நடத்தின. இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கலை, அறிவியல், நிர்வாகம், மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மலாய் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியன் வரவேற்றார். மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் டத்தோ எஸ்.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்திய ஆய்வியல் துறைத் தலைவரும், மாநாட்டுத் தலைவருமான முனைவர் எஸ்.குமரன் சிறப்புரையாற்றினார்.
நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் வி.எஸ்.தியாகராஜன் கலந்துகொண்டு எளிய முறையில் தமிழ் கற்பிப்பது எப்படி எனும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பித்து தாய்நாடு திரும்பியபேராசிரியர் தியாகராஜனை என்எல்சி அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நெய்வேலி நகர தமிழ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பாராட்டினர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை சென்னை அநுராகம் பதிப்பகத்தின் உரிமையாளர் நந்தன் மாசிலாமணி செய்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக