உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 11, 2011

கடலூர் கெடிலம் ஆற்றில் ஆலைக் கழிவு நீரில் மூழ்கிய குடிநீர் குழாய்!


கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று நீரில் கருப்பு நிறத்தில் கலந்து செல்லும் அசுத்தம் நிறைந்த ஆலைக் கழிவுகளுக்கு உள்ளே, மூழ்கிக் கிடக்கும் நகராட்சி கு
கடலூர்:
 
            கடலூர் கெடிலம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள ஆலைக் கழிவு நீரில், நகராட்சி குடிநீர் குழாய் மூழ்கியுள்ளது. இதனால் இந்தக் குடிநீரை பயன்படுத்தும் நகர மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கடலூர் நகரின் மையப் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. 
 
              காட்டாறு என்பதால், மழைக் காலங்களில் சில நாள்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது உண்டு.மற்ற நாள்களில் கெடிலம் ஆற்றின் இரு கரையிலும் உள்ள ஊர்களில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள் கொட்டிக் குவிக்கப்படுகிறது. கெடிலம் ஆற்றின் கரைகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளும் ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்தக் கழிவுகள் ஆங்காங்கே குட்டைகள் போல் தேங்கியிருப்பது வாடிக்கை. கடலூரில் கம்மியம்பேட்டை, அரசு மருத்துவமனை பின்புறம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் உப்பங்கழி நீருடன், சாக்கடை நீரும் கெடிலம் ஆற்றில் விடப்படுகிறது. 
 
                 அண்மையில் பெய்த மழையால் கெடிலம் ஆற்றில் சிறிதளவு தண்ணீர் ஓடுகிறது. ஆனால் இந்த தண்ணீர் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும், ஆறு பாய்ந்தோடும் கரையோரப் பகுதி முழுவதும் கடந்த இரு நாள்களாக துர்நாற்றம் வீசுகிறது. கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர். கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் இருந்து செம்மண்டலம் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் நகராட்சி பிரதான பகிர்மான குடிநீர் குழாய் கெடிலம் ஆற்றைக் கடந்து செல்கிறது. ஆற்றில் ஓடும் இந்தக்கழிவு நீரில், குடிநீர் குழாய் மூழ்கிப்போயுள்ளது என்பது தான் அதிர்ச்சி தரும் விஷயம். குழாயில் உள்ள சிறு துளைகள் வழியாக அசுத்த நீர் உள்ளே புகும் அபாயம் உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் அசுத்த குடிநீரை குடிக்கும் அவலம் உருவாகும். இதை நகராட்சி நிர்வாகம் உணர்ந்து இருக்கிறதா என்று தெரியவில்லை. 
 
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறுகையில், 
 
             நீராதாரங்களில் ஆலைக் கழிவு உள்ளிட்ட எதுவும் கலக்கக்கூடாது என்பது தான் சட்டம். ஆனால் கெடிலம் ஆற்றில் ஆலைக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகள் விடப்படுகிறது. இதனால் கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள குடிநீர் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. கடலூர் நகர மக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பிரச்னை குறித்து பலமுறை புகார் செய்து விட்டோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior