கடலூர்:
மூன்று நாள்களில் கடலூர் பிரதானச் சாலைகளை தற்காலிகமாகச் சீரமைக்க வேண்டுமென அமைச்சர் எம்.சி. சம்பத் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால், கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளில், முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான 12 கி.மீ. சாலை, வண்டிப்பாளையம் சாலை, புதுப்பாளையம் பிதானச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை தற்காலிகமாக சீரமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மிகமோசமாக பாழடைந்துள்ள முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான சாலையை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
குடிநீர் வாரியம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கடலூர் நகராட்சி அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு, இச்சாலையை 3 நாளில் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், குறைந்தது 40 நாள்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், ஆணையர் மா.இளங்கோவன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரகுநாதன், தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் சிவசக்திவேலன், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தாமரைச் செல்வன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக