சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் (இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மேனேஜ்மெண்ட் செக்யூரிட்டி) படிப்புகளை இந்த கல்வி ஆண்டு முதல் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதற்கான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஹெச்.சி.எல் நிறுவன துணைத்தலைவர் ஆனந்த் ஏகாம்பரம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொலைதூரக்கல்வி இயக்க இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் கூறியது:
எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் பாடத்தினை ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதில் பெருமைப்படுகிறோம். இந்த முயற்சியானது இரண்டு நிறுவனங்களும் பரஸ்பர முறையில் இணைந்து நல்ல கல்வியை வழங்குவதன் மூலம் இம்முறையை மேலும் தொடருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இப்பாடங்களை கற்பதன் மூலம் மாணவர்களும், பொதுத்துறை, தனியார்துறை, வங்கி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் தொழிலுக்கான திறனை எளிதில் பெற முடியும் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.
ஹெச்.சி.எல். நிறுவன துணைத்தலைவர் ஆனந்த்ஏகாம்பரம் கூறுகையில்,
இந்திய தொழில் நிறுவனங்களில் ஏற்படும் போட்டிகளை எதிர்காலத்தில் உடனடியாக சமாளிக்க முக்கியமாக கருத்தப்படுவது திறமையான நிர்வாகம், விரைவான வளர்ச்சி மற்றும் பாதுகாத்து நிர்வகித்தலாகும். இதனை கருத்தில் கொண்டு நம்நாட்டின் புகழ்மிக்க கல்வி நிறுவனமான அண்ணாமலைப் பல்கலையுடன் இணைந்து இந்த மேலாண்மை பட்டப்படிப்பினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் ஆனந்த் ஏகாம்பரம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக