தமிழகத்தின் கிராம புறங்களில் உள்ள இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள், சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோருக்கு இலவசமாக மாதவிடாய் பஞ்சுகள் (நாப்கின்ஸ்) வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:
அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக மாதவிடாய் பஞ்சுகள் (நாப்கின்ஸ்) வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்திரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும்.
இந்த மாதவிடாய் பஞ்சுகள், அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும். இதுவன்றி சிறைச்சாலைகளிலுள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.
பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பஞ்சுகளை தூக்கி குப்பையில் எரிந்து சுற்றுப்புற சுகாதாரம் மாசு அடைவதை தடுக்க அந்தந்த கிராமப்பகுதிகளில் குழிகள் தோண்டி புதைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இளம் பெண்களால் பயன்படுத்தப்பட்ட பஞ்சுகளை சுகாதார முறையில் அழிக்க சூளை அடுப்பு நிறுவிடவும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
மேலும், இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பெண்ணிற்கும் வளர் இளம் பெண்கள் நலக் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது. வளர் இளம் பெண்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு எடை, உயரம், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு ஆகியவை இந்தக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு அவர்களின் நலன் கண்காணிக்கப்படும். வளர் இளம் பெண்களின் ரத்த சோகை தடுப்புத் திட்டமாக ஒவ்வொரு பெண்ணிற்கும் வாரந்தோறும் ஒரு இரும்பு சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல்புழு நீக்க மாத்திரையும் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத்துறை, சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித்துறைகளின் அலுவலர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு ஒன்றினை அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 44 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவாகும். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக