கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுனாமி நிவாரணப் பணிகளை, வெளிநாட்டுப் பிதிநிதிகள் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
தேசிய ஊரகப் பயிற்சி மையம் ஹைதராபாத்தில் உள்ளது. கஜகஸ்தான், நைஜீரியா, ஆப்பிரிக்கா, கியூபா, நமீபியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 45 நாள் பயிற்சிக்காக ஹைதராபாத் வந்துள்ளனர். அவர்கள் கள ஆய்வுக்காக திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வந்தனர். மதலப்பட்டு கிராமத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் தோல்பொருள்கள் தயாரிப்பு நிலையம், தாழங்குடா சுனாமி குடியிருப்பு, பெரியப்பட்டு சுயஉதவிக் குழுவினர் நடத்தும் மீன் வலை தயாரிக்கும் நிலையம், சின்னக்குமட்டியில் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் சிமென்ட செங்கற்கள் தயாரிப்பு ஆலை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு பொது சுகாதார வளாகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லியைச் சந்தித்துப் பேசினர். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி மறுவாழ்வுப் பணிகளை கேட்டுத் தெரிந்து கொண்டனர். தேசிய ஊரக பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கிருபா சங்கர் (மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குநர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக