கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடியை சந்தித்து விட்டு வெளியே வரும், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடலூர்:
அ.தி.மு.க. அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று, முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடலூரில் தெரிவித்தார்.
நிலம் பறிப்பு புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். அவரை வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
பின்னர் சிறை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் கூறியது:
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவேன், உலகத்தில் 2-வது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவேன் என்று பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார்.போயஸ் தோட்டத்தையும் மனநல மருத்துவமனையாக மாற்றி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை, அடியோடு நிறுத்தி விட்டார்.துக்ளக் ஆட்சியைப் போல் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
ஹிட்லர் ஆட்சிபோல் 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.அவர்களின் குடும்பங்கள் கண்ணீரும் கம்பளையுமாக உள்ளன. கடந்த முறை மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, 70 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மீண்டும் அந்த அவலம் உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எல்லோருக்கும் எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது. இந்த ஆட்சியின் அவலங்களைக் கண்டித்து பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. இளைஞரணி சார்பில் வருகிற 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.அதைத் தொடர்ந்து கட்சித் தலைமையின் அனுமதி பெற்று உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த ஆலோசித்து வருகிறோம் என்றார் ஸ்டாலின்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினர் ஆதி.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, முன்னாள் நகராட்சித் தலைவர்கள் ஏ.ஜி.ராஜேந்திரன், து.தங்கராசு உள்ளிட்டோர் வந்து இருந்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக