கடலூர்:
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தவறான கொள்கைகளால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக பி.எஸ்.எஸ்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் கே.டி. சம்பந்தம், இளங்கோவன், ஜெயராமன், பி.வெங்கடேசன் ஆகியோர் புதன்கிழமை கடலூரில் கூறியது.
இந்தியாவில் அனைத்து தனியார் செல்போன் நிறுவனங்களும், 1998-ல் சேவை தொடங்க மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆணையம் அனுமதித்த போதிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 2003-ல் தான் அனுமதி அளிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய கருவிகளை வழங்க மறுத்தது மத்திய அரசு. இதனால் 2004-ல் 2-ம் இடத்தில் இருந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் இப்போது 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. எனினும் தரைவழி தொலைபேசி இணைப்புகளைப் பொறுத்தரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. பி.எஸ்.என்.எல். செல்போன் டவர்களின் ஒலிபரப்பு சக்தி 13-ல் இருந்து 20 வாட்ஸ் அளவுக்குள்தான் இருக்க வேண்டும்.
அதுதான் மக்களுக்குப் பாதுகாப்பானது. எனவே 2 முதல் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு செல்போன் டவர் வீதம் பி.எஸ்.என்.எல். நிறுவுகிறது. இதனால் மூலத்தனச் செலவு அதிகரிக்கிறது. ஆனால் விதிகளை மீறி தனியார் செல்போன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மக்களுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் செலவைக் குறைப்பதற்காக 40 வாட்ஸ் சக்தி கொண்ட செல்போன் டவர்களை அவை அமைக்கின்றன. இதனால் தனியார் செல்போன்கள் நிறுவனங்களின் சிக்னல்கள் நன்றாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆனால் 40 வாட்ஸ் ஒலிபரப்பு சக்தியால் மக்களுக்கு புற்றுநோய் போன்ற உடல் நலக்கோடு வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதைக் கண்டு கொள்வதே இல்லை. இந்த ஆண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சேவைக் கட்டணம் செலுத்தி உள்ளது. ஆனால் தனியார் செல்போன் நிறுவனங்கள் சேவைக் கட்டணம் செலுத்துவது இல்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் சொத்துமதிப்பு குறைப்பு ரூ.10 ஆயிரம் கோடி. இதன் விளைவாக கடலூர் மாவட்ட தொலைத்தொடர்பு மேலாளர் அலுவலகத்தின் மதிப்பு ரூ.100 மட்டுமே. இதன் அடிப்படையில் சொத்து மதிப்பைக் கணக்கிடுவதால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி.
ஆனால் உண்மையான மதிப்பு ரூ.1 லட்சம் கோடி. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ. 11 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. ஒழுங்குமுறை ஆணையம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு விரோதமாக, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக மேற்கொண்ட கொள்கைகளால், கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.1 லட்சம் கோடி. இந்த நிலையில் 2.75 லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில் 1 லட்சம் ஊழியர்களைக் குறைக்க, விருப்ப ஓய்வுத் திட்டம் கொண்டு வருவதை எதிர்க்கிறோம்.
இதில் பணிபுரியும் ஐடிஎஸ். அதிகாரிகளை உடனே தொலைத் தொடர்புத் துறைக்கே அனுப்ப வேண்டும். நிறுத்தப்பட்ட போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.8,313 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி வருகிறோம். வரும் 8-ம் தேதி கடலூரில் பேரணியும், 15-ம் தேதி வேலை நிறுத்தமும் செய்கிறோம் என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக