உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜனவரி 06, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் ஏற்ப்பட்ட சேத விபரங்கள்

கடலூர்
 
             தானே புயலால் கடலூர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.  15 அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரண பணிகளை கவனித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு முழுமையான இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

            கடலூர் மாவட்டத்தில் புயல் ஏற்படுத்திய சேதம் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. புயல் பாதித்ததுமே தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டித்து விட்டதால் ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக வெளியே தெரியவில்லை. இப்போது தான் முழுமையாக தகவல் தொடர்பு கிடைத்துள்ளன.

மின்சார துறையில் மட்டும் ரூ.1400 கோடி சேதம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார். அரசு துறை சேதம் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 60 சதவீதத் துக்கு மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்துவிட்டன. இவற்றில் பல மரங்கள் நூற்றாண்டு காலமாக இருந்தவை. எந்த புயலாக இருந்தாலும் புளிய மரம் தாங்கிக்கொள்ளும் என்று சொல்வார்கள். ஆனால் ராட்சத புளிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. முந்திரி, பலா, தென்னை மரங்கள் பெரும்பாலும் விழுந்துவிட்டது.

              ஆங்காங்கே ஒருசில மரங்களை மட்டுமே காணமுடிகிறது.   மாவட்டம் முழுவதும் கடலோர தாலுகாக்களை சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் குடிசை வீடுகளை காணவில்லை. அதே போல ஓட்டு வீடுகளும் முற்றிலுமாக சாய்ந்து விட்டன. காங்கிரீட் வீடுகளில் கூட ஜன்னல்கள், கதவுகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.

                கடலூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. இதேபோல மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களும் இயங்க முடியாத அளவுக்கு பாதிப்படைந்துள்ளன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கடலூர் மாவட்டத்தில் 2500 வீடுகள் சேதம் அடைந்திருந்தன. 950 கால்நடைகள் உயிரிழந்தன.

               5 ஆயிரம் சிறுபடகுகள், 300 எந்திர படகுகள் பாதிக்கப்பட்டன. 1200 ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. ஆனால் புயல் பாதிப்பு இதை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 90 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் அழிந்துள்ளன. 2 லட்சம் குடும்பங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

                கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த தென்னை, பலா, முந்திரி மரங்கள் நாசமாகி விட்டதால் விவசாயிகள் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. இதேபோல நெல் பயிர், கரும்பு ஆகியவையும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் சுனாமியை விட தானே புயலுக்கு உயிரிழப்பு குறைவாக இருந்தது.

              எனவே பாதிப்பு பற்றிய விவரங்கள் வெளியிடங்களுக்கு அதிகமாக தெரியவில்லை.   சுனாமி பாதித்த போது மாநிலம் முழுவதுமிருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் உடனடியாக களமிறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.

              எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. அரசு கொடுக்கும் உதவிகள் மட்டும் ஆங்காங்கே கிடைத்து வருகிறது. தொண்டு நிறுவனங்கள் ஓரளவு உதவி செய்தால் தான் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வு பழைய நிலைக்கு திரும்பும் நிலை இருக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் மக்கள் வீடுகளை இழந்து கட்டாந் தரையையே வீடாக பயன்படுத்தி வருகின்றனர்.

                ஓட்டு வீடுகளை சீரமைக்க ஓடுகளோ, அதற்கான மரங்களோ கிடைக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கரும்பு சோகை, தென்னை ஓலை வைத்தே குடிசை வீடுகளை அமைத்திருப்பார்கள். வீடுகளை மீண்டும் கட்ட இவை கூட கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். வீடுகளில் விழுந்த பல வீடுகளில் ராட்சத மரங்கள் விழுந்து கிடக்கின்றன.

                 அவற்றை அகற்றுவதற்கு ஜே.சி.பி. போன்ற எந்திரங்கள் வந்தால் தான் முடியும். அந்த எந்திரங்கள் கிடைக்காததால் மரங்கள் அப்படியே கிடக்கின்றன. புயல் காற்றின் போது மழையும் சேர்ந்து பெய்ததால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. இதனால் உடுத்துவதற்கு துணி இல்லாமலும், சாப்பிடுவதற்கு உணவு பொருட்கள் இல்லாமலும் பலர் அவதிப்படுகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior