கடலூர்:
‘தானே’ புயலால் சேதம் அடைந்த கடலூர் மாவட்டம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. புயலால் முறிந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை நட்டு மின்இணைப்பு கொடுக்கும் பணியில் உள்ளூர் ஊழியர்களுடன், வெளிமாவட்ட மின்ஊழியர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் மின்சார நிலையை சீர் செய்வதற்கான பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்காக மட்டும் 300 கோடி ரூபாய் நிதியை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே பணிகளில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு தேவையான பொருட்களுக்கும், பணியாளர்களுக்கும் நிதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் பணிகளை கண்காணிப்பதற்காக சென்னையிலும், கடலூரிலும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகளில் 82 சதவீதம் அளவுக்கும், கிராம பஞ்சாயத்துகளில் 77 சதவீதம் அளவுக்கும் அத்தியாவசிய பணிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் போன்ற பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கான மின்இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. இருந்த போதிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளுக்கும், நகர பஞ்சாயத்துகளுக்கும் பொங்கலுக்கு முன்பாக மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் நிரம்பி உள்ள இடங்களுக்கும், தூரத்தில் தனித்திருக்கும் இடங்களுக்கும் ஒரு வார காலத்துக்குள் மின்சாரம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகளை செய்வதற்காக இன்னும் கூடுதலான பணியாளர்கள் கடலூர் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பொங்கல் விடுமுறை வருகிறதால், அந்த விடுமுறை நாட்களில் வேலை பார்க்கும் மின் ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அக்காலக்கட்டத்தில் பணியாளர்களுக்கு மும்மடங்கு சம்பளம் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக