கடலூர்:
சிதம்பரத்தில் பொறியாளர் தவறவிட்ட 16 பவுன் நகைகளை கண்டெடுத்த பல்கலைக்கழகப் பேராசிரியர் தம்பதியினர், காவல் துறையில் ஒப்படைத்தனர். அவர்களின் நேர்மையை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் புதன்கிழமை வெகுவாகப் பாராட்டினார்.
சிதம்பரம் மாரியப்பா நரில் வசிப்பவர் பொறியாளர் சந்திரமோகன். மயிலாடுதுறை குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிகிறார். செவ்வாய்க்கிழமை அவர் தனது குடும்பத்துக்குச் சொந்தமான 16 பவுன் நகைகளை, ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு, செவ்வாய்க்கிழமை இரவு, சிதம்பரம் சிவபுரி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். பழைய நகைகளான அவற்றைக் கொடுத்து, புதிய நகைகளாக மாற்ற சிதம்பரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு, அவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
நகைக் கடைக்குச் சென்று பார்த்தபோது, நகைகள் வைத்து இருந்த பை காணாமல் போயிருந்ததை அறிந்து, அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனேயே அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சந்திரமோகன் புகார் செய்தார். இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களாகப் பணிபுரியும் ரவிச்சந்திரன், சாந்தா தம்பதியினர் 16 பவுன் நகைகள், சாலையில் கிடந்து கண்டெடுத்ததாக, புதன்கிழமை காலை கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவனிடம் ஒப்படைத்தனர். பின்னர் பொறியாளர் சந்திரமோகன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார்.
அவரிடம் நகைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஒப்படைத்தார்.ரவிச்சந்திரன், சாந்தா தம்பதியை எஸ்.பி. வெகுவாகப் பாராட்டினார். பேராசிரியர் தம்பதியின் நேர்மை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக இருந்ததாக எஸ்.பி. பகலவன் கூறினார். இதுகுறித்து பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகையில், நானும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு, சிவபுரி சாலையில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது வேகமாகச் சென்ற காரில் இருந்து பை ஒன்று தவறி விழுந்தது. அதை எடுத்து வைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பினோம். பையை பிரித்துப் பார்த்தபோது, அதில் தங்க நகைகள் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.
பின்னர் இதுகுறித்து எனது நண்பர் மூலமாக கடலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தோம். அவரது ஆலோசனையின் பேரில் நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை ஒப்படைத்தோம் என்றார் பேராசிரியர் ரவிச்சந்திரன். ரவிச்சந்திரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் துறைத் தலைவராக இருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக