கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நிகழ்வாண்டில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் வட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் விநியோகிப்பதற்குத் தயாராக கடலூர் முதுநகர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆய்வு செய்தார். விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இப் பொருட்கள் கடலூர் முதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்டகச் சாலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கே.என்.பேட்டை, திருவந்திபுரம் பகுதிகளில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர் இதுதொடர்பாக ஆட்சியர் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்த சிறப்புத் திட்டமான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புயல் காரணமாக இப்பொருட்கள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு, புயல் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்றது.தற்போது மீண்டும் தகுதியுள்ள அனைவருக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக கடலூர் வட்டத்துக்கு மட்டும் 2,308 மின் விசிறிகள், 7,702 மிக்ஸிகள், 5,575 கிரைண்டர்கள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இவற்றை விநியோகிக்கும் பணி நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில், நிகழ்வாண்டில் 2,723 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் இவ்வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தலா ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுவது சிறப்பம்சம் ஆகும். இதனால் பயனாளிகளுக்கு மின் கட்டணச் செலவு இல்லை. நாட்டிற்கும் மின்சேமிப்பு ஏற்படும்.
இத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் சம்மந்தப்பட்ட 26-12-2011 அன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர். ஆய்வின்போது சார் ஆட்சியர் கிரண் குராலா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக