
விருத்தாசலம்:
விருத்தாசலம் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் சங்கர். சமீபத்தில் நகர செயலாளர் பதவியில் இருந்து சங்கர் மாற்றப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் புதிய நகர செயலாளராக சரவணன், தலைவராக கார்த்திக், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் கடந்த 18-ந் தேதி நியமிக்கப்பட்டனர். இது சங்கரின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
புதிய நிர்வாகிகள் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் பரிந்துரையின் பேரில் தான் நியமிக்கப்பட்டதாக சங்கரின் ஆதரவாளர்கள் எண்ணினர். இதனால் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் கொடும்பாவியை எரித்தனர். மேலும் முத்துகுமார் எம்.எல்.ஏ. வீட்டின் ஜன்னலை உடைத்தனர்.
இதுகுறித்து முத்துக்குமார் எம்.எல்.ஏ. விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் தனது வீட்டு ஜன்னலை உடைத்ததாக கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே செவ்வாய்கிழமை காலை சங்கரின் ஆதரவாளரான ஜல்லி செந்தில் என்பவர் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பாலக்கரை ரவுண்டானாவில் கண்டன போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த முத்துகுமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களான ஆசிரியர் பாஸ்கர், பாலமுருகன், சரவணன், ஜானகி ஆகியோர் ஜல்லி செந்திலை திட்டி தாக்கியதாக தெரிகிறது.
மேலும் சங்கரின் ஆதரவாளரான வேல்முருகன் என்பவரின் காரையும் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகை அருகே செயல்பட்டு வந்த சங்கரின் கட்சி அலுவலகத்தில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் யாரோ புகுந்து அங்கிருந்த டி.வி., நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்களையும் கிழித்து எறிந்து விட்டு சென்று விட்டனர். இன்று காலை இதனை பார்த்த சங்கரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினரிடையே தொடர்ந்து மோதல் சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக