உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 14, 2012

கடலூர் உப்பனாற்றில் கலந்த ரசாயனக் கழிவுகளால், மீனவர்கள் பாதிப்பு





 
கடலூர்: 
 
        கடலூர் உப்பனாற்றில் சனிக்கிழமை திடீரெனக் கலந்த ரசாயனக் கழிவுகளால், மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.  
 
           சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை முதல் சென்னை வரை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வர்த்தக ரீதியான படகுகள் போக்குவரத்துக்காக, கடற்கரையையொட்டி ஆங்காங்கே, கடலுடன் தொடர்பு கொண்டு அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் என்ற நீர்வழிப்பாதைதான், தற்காலத்தில் உப்பனாறு என்று அழைக்கப்படுகிறது.  இந்த உப்பனாற்றில்தான் மேற்கு மாவட்டங்களில் இருந்து பெருக்கெடுத்து வரும் பெண்ணையாறு, கெடிலம் ஆறு, பரவனாறு ஆகியவை கலந்து வங்கக் கடலில் சங்கமிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறந்த நீர்வழிப் பாதையாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய், பராமரிக்கப்படாமல் போனதால், தற்போது ஆங்காங்கே தூர்ந்துக் கிடக்கிறது. 
 
           சிறந்த வர்த்தகத்துக்காக ஆங்கிலேயர்களால் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட கால்வாய், இன்று மிகப்பெரும் ரசாயனத் தொழிற்சாலைகளை அமைத்துக் கொள்ளவும், அவற்றின் கழிவுகளை விடுவதற்கும் ஏற்ற இடமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதால், மக்களின் உடல் நலத்துக்குக் கேடுவிளைவிக்கும் மிகமோசமான ரசாயனக் கழிவுகளின் சங்கமமாக உப்பனாறு மாற்றப்பட்டு இருக்கிறது.  ÷உப்பனாற்றின் கரையில் அமைந்துள்ள கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 25-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் இவைகள் பெரும்பாலும் தங்களது ரசாயனக் கழிவுகளை உப்பனாற்றிலேயே கலந்து வந்தன.  
 
           இதனால் உப்பனாற்றில் உள்ள மீன்வளத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. மீன் வளம் வெகுவாகக் குறைந்ததுடன், மீனவர்களை மிகமோசமான தோல்நோய்களும் தொற்றிக் கொண்டன. இதனால் உள்நாட்டு மீனவர்கள் பலர் மீன்பிடித் தொழிலைவிட்டு கூலி வேலைகளுக்குச் சென்று விட்டனர்.  உப்பனாற்றில் பிடிபடும் மீன்களின் உடலிலும் ஃபுளோரைடு உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதற்கு, இந்த ரசாயனக் கழிவுகள் காரணமாக இருந்து இருக்கின்றன. 
 
         உப்பனாற்றில் ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதற்கு, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களில் விளைவாக உப்பனாற்றில் ஆலைக் கழிவுகள் கலப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.  எனினும் பல ஆலைகள் இன்னமும் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக, ரசாயனக் கழிவுகளை உப்பனாற்றில் கலந்து கொண்டு இருப்பதாகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இத்தகைய மோசமான நடவடிக்கைகளைக் கண்காணிக்க உப்பனாற்றின் கரையோரமாக, சாலை ஒன்று அமைக்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை உப்பனாற்றில் செம்மங்குப்பம் அருகே, ரசாயனக் கழிவுகள் பெருமளவில் கலக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களின் கால்களில், அரிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். 
 
            இது குறித்து சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குப் புகார் செய்தார். மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து உப்பனாற்றைப் பார்வையிட்டு, சோதனைக்காக ரசாயனக் கழிவுகள் கலந்த ஆற்றுநீரின் மாதிரியை எடுத்துச் சென்று உள்ளனர்.  ஆய்வுக்குப் பின்னரே, எந்த தொழிற்சாலையில் இருந்து, என்ன வகையான ரசாயனக் கழிவுகள் உப்பனாற்றில் கலக்கப்பட்டன என்ற விவரம் தெரியவரும்.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior