உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 04, 2012

மிக விரைவில் கடலூரில் மிக பெரிய பேருந்து நிலையம்

கடலூர்:
 
        கடலூரில் விரைவில் விசாலமான பஸ் நிலையம் அமையும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.  
 
            3 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் வந்துபோகும் கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும் இந்த பஸ் நிலையத்தை பஸ் நிலையம் என்று சொல்வதை விட வணிக வளாகம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இங்கு வணிகர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி காணப்படுகிறது. இதனால் பஸ் பயணிகளின் நலன்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.  எனவே இதை நகர பஸ் நிலையமாக்கி விட்டு, கரும்பு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடத்தில் புதிய விசாலமான பஸ் நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பலமாகப் பேசப்பட்டு வந்தது. கடலூர் நகராட்சியிலும் புதிய பஸ்நிலையம் வேண்டும் என்ற தீர்மானம் ஏற்கெனவே 6 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 
 
          இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. கரும்பு ஆராய்ச்சி நிலைய நிலத்தில் நிலத்தடி நீர், உவர் நீராகி விட்டதால் பயிர்கள் சரியாக வளர்வதில்லை என்று கூறப்படுகிறது.   எனவே இங்குள்ள வேளாண் துறை அலுவலகங்கள், வேளாண் பல்கலைக்கழக அலுவலகம் ஆகியவற்றுக்கான கட்டடங்கள் அமைந்து இருக்கும் நிலங்களை மட்டும் விட்டு விட்டு, மீதம் உள்ள நிலத்தை பஸ் நிலையத்துக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
 
          கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 90 ஏக்கர் நிலத்தை வழங்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த இரு நாள்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டத்தை, வணிகப் பெருமக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே லாரன்ஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் வரவிடாமல் தடுத்த பெருமையும், ரயில்வே சுரங்கப்பாதை வரக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்ற பெருமையும் அவர்களுக்கு உண்டு.  
 
          தற்போதைய பஸ்நிலையம் அமைந்திருக்கும் லாரன்ஸ் சாலையில் பெரும்பகுதி நிலங்கள், கோயில்களுக்கும் நகராட்சிக்கும் சொந்தமானவை. இதில்தான் பெரும்பகுதி வணிகர்கள் கட்டுமானங்களைச் செய்து கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இவர்களின் வர்த்தகத்தால் கோயில்களுக்கோ, நகராட்சிக்கோ பெரிய வருவாய் எதுவும் இல்லை என்பதுதான் குறிப்பிடத்தகுந்தது.
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior