சிதம்பரம்:
தென்கொரியாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சிதம்பரம் பள்ளி மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் 10 முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான சிதம்பரம் மணலூர் எடிசன் ஜி.அகோரம் மெமோரியல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர் எம்.குருவிஷ்ணு (10) பங்கேற்று உரையாற்றினார்.
புவிவெப்பமடைதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து கருத்தரங்கில் அவர் பேசினார். இக்கருத்தரங்கை சாம்சங் இன்ஜினியரிங், டுன்சா எக்கோ ஜெனரேஷன், கொரியா கிரீன் பௌண்டேஷன், கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் என்வயர்மென்டல் ஸ்டேடிஸ், சியோல் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. இம்மாநாட்டில் உலகிலுள்ள மற்ற நாடுகளிலிருந்து 400 பேரும், கொரியாவில் இருந்து 350 மாணவர்களும் பங்கேற்றனர். உலகளவில் 7 நாடுகளில் இருந்து 5 மாணவர்கள் அவர்களது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகள், கட்டுரைப்போட்டி மற்றும் டுன்சா எக்கோ ஜெனரேஷன் வளைதளத்தில் எழுதியதன் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டுன்சா எக்கோ ஜெனரேஷனின் 7-வது ஆசிய பசுபிக் இளம் தூதுவரான குருவிஷ்ணு தேர்வு செய்யப்பட்டவர்களில் வயதில் மிகவும் சிறியவராவார். உலகளாவிய சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றித் திரும்பிய மாணவரையும், அவரது பெற்றோர்கள் கே.மதிவாணன், ஏ.தரணி ஆகியோரையும் பள்ளித் தாளாளர் கீதாஅகோரம், முதல்வர் கல்யாணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக