உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, மார்ச் 02, 2012

காட்டுமன்னார்கோவிலில் சோழர் காலத்து பழமையும், பெருமையும் வாய்ந்த வீரநாரயணப் பெருமாள் கோயில் பாதுகாப்பு கேள்வி குறி


சிதம்பரம்:

        கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சோழர் காலத்து பழமையும், பெருமையும் வாய்ந்த வீரநாரயணப் பெருமாள் கோயில் பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளதாக பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

            காட்டுமன்னார்கோவில் சன்னதி தெருவில் சோழர் காலத்து பழமை வாய்ந்த வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் முதலாம் பராந்தக சோழன், குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டதாகும். மதங்க மகரிஷி சாபவிமோசனம் பெற்ற கோயிலாகும்.நாலாயிர திவ்யபிரபந்தத்தை தொகுதி நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் ஆகியோர் பூஜித்த கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமியில் தேர், தெப்ப உற்சவம் நடைபெறும். ஆனி மாதத்தில் நாதமுனிகள் அவதார உற்சவம் நடைபெறும். இவையல்லாமல் 12 மாதங்களும் இக்கோயிலில் உற்சவம் நடைபெற்று வருகிறது.

            இக்கோயிலில் பழங்காலத்து 60 ஐம்பொன் சிலைகள், நகைகள் உள்ளன. இவைகள் விலைமதிக்க முடியாதவை எனக் கூறப்படுகிறது. 2008, 2009 ஆண்டுகளில் இக்கோயிலில் உள்ள வெள்ளி கிரீடங்கள், பாத்திரங்கள் திருடு போனது. 2009-ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கோயிலுக்கு இரவுக் காவலாளிகளை நியமிக்க வேண்டும் கோயில் முன்னாள் அறங்காவலர் எம்.தோத்தாத்திரி, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மற்றும் கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு பல முறை மனுக்கள் கொடுத்துள்ளார்.பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மாவட்ட காவல்துறை பரிந்துரையின் பேரில் முன்னாள் ராணுவத்தினரை இரவு காவலாளியாக நியமிப்பது வழக்கம். 

          அண்மைக்காலமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக அறநிலையத் துறை, கடலூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் ஆகியன இக்கோயிலுக்கு இரவுக் காவலாளியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளன
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior