உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, மார்ச் 02, 2012

"தானே புயலின் அறுவடை" குறும்பட சி.டி. மத்திய அமைச்சரிடம் அளித்தார் இயக்குநர் தங்கர்பச்சான்


புயல் தொடர்பான குறும்பட சி.டி.யை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் வியாழக்கிழமை வழங்குகிறார் திரைப்பட இயக்குநர்  தங்கர்பச்சான்
      
           தானே  புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வி.நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோரை தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.  புயல் பாதித்த இடங்களில் மறுவாழ்வுத் திட்டங்களை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எந்தப்பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.  கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய "தானே' புயல் பாதிப்பு குறித்த 35 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தை தங்கர்பச்சான் தயாரித்து இயக்கி உள்ளார்.
 
          "தானே புயலின் அறுவடை' என்று அந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.  அந்தக் குறும்பட சி.டி-யை (குறுந்தகடு) தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரிடம் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் அளித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்தார். "தானே' புயல் பாதிப்பு பற்றி ஜெயந்தி நடராஜனிடம் விளக்கிய அவர் தமது குறும்பட சி.டி-யையும் அளித்தார். 
 
 பின்னர் தங்கர்பச்சான் அளித்த பேட்டி:  
 
            "தானே' புயலால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, பலாப்பழம், தென்னை, புளியமரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகை மரங்கள் மீண்டும் வளர குறைந்தது ஆறு முதல் எட்டு வருடங்கள் ஆகும். இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களின் வருமானத்தை நம்பி அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் நடைபெற திட்டமிட்டிருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்த குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் இல்லை. அதனால் புயலால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளின் பள்ளிக்கூட கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.  தற்போது புயல் பாதித்த இடங்களில் நிலத்தடி நீர் 600 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. பிரச்னையின் தீவிரம் கருதி, கடலூர்-பரங்கிப்பேட்டை இடையே புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது.  மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
 
            அப்பணியில் பெண்கள் ஈடுபட்டு வருதால் காலதாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் புயல் பாதிப்பின் தாக்கம் தெரியவரும். மக்களுக்கு நிரந்தர மறுவாழ்வுத் திட்டங்களை அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வருகிறேன். அவர்களும் கனிவாக கேட்டு கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியது நம்பிக்கை அளிக்கிறது என்று தங்கர்பச்சான் கூறினார்.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior