
அண்ணாமலைநகர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்ற மாணவர்கள், மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்து.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதிகளில் மாணவர்களின் அதிவேக மோட்டார் சைக்கிள் பயணத்தால் அடிக்கடி விபத்துகள் தொடர்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளிலும், சுற்றுப்புற பகுதிகளில் வீடு எடுத்தும் தங்கியுள்ளனர். இதில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் பயிலுகின்றனர். வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ள பெரும்பாலான மாணவர்கள் விலை உயர்ந்த, அதிவேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளனர். இம்மாணவர்கள் கல்லூரியிலிருந்து தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட நிமிடத்தில் செல்வதாக மற்ற மாணவர்களிடம் பந்தயமிட்டு வேகமாக செல்கின்றனர்.
இவையல்லாமல் இம்மாணவர்கள் எதிரிலும், அக்கம், பக்கத்தில் வரும் வாகனங்களை பற்றி சிறிதுகூட கவலைப்படாமல் அதிவேகத்தில் செல்வதால் தினம் ஒரு விபத்து ஏற்படுகிறது. அண்மையில் சிதம்பரம்-அண்ணாமலைநகர் ரயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்ற மாணவர்கள், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இருவர் படுகாயமுற்றனர்.
மாணவர்கள் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வதால் பல்கலைக்கழகத்துக்கு வாகனங்களில் செல்லும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். வட்டார போக்குவரத்து துறையும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் செல்வதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக