உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 01, 2013

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை








கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

மாணவிகளுக்கு பரிசு

நேற்று ( 31/05/2013 ) வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி துர்கா மாநில அளவில் முதல் இடத்தையும், மாணவிகள் ஆர்த்தி, நிலா, பவித்ரா ஆகியோர் 2–வது இடத்தையும், மாணவிகள் ஜெசிமா, சங்கீதா, வசுமித்ரா ஆகியோர் 3–வது இடத்தையும் பிடித்தனர்.

சாதனை புரிந்த மாணவிகள் அனைவரும் நேற்று காலையில் தங்கள் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுமுறையில் சென்று இருப்பதால் அவருக்கு பதிலாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகனசந்திரன் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். உடன் முதன்மை கல்வி அதிகாரி ஜோசப்அந்தோணிராஜ், சமூகபாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயச்சந்திரன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் அளித்த பேட்டி 

நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுப்போம்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு மாணவி முதல் இடத்தையும், 3 மாணவிகள் 2–வது இடத்தையும், 3– மாணவிகள் 3–வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை முதன்மை செயலாளரின் வழிகாட்டுதல் படி, பள்ளி கல்வி இயக்குநரின் ஆலோசனையின் பேரில் சமச்சீர் கல்வியில் புதிய பாடங்கள் புகுத்தப்பட்டதன் காரணமாக மாநில அளவில் 3 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைக்காட்டிலும் 6 சதவீதம் குறைவாகும். அடுத்த ஆண்டு இதை ஆண்டு நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுப்போம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் ஏதாவது ஒரு மாணவர் இடம் பிடிப்பார். ஆனால் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 7 மாணவிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில் ஒருவர் கூட மாணவர் இல்லை. அதேபோல மாவட்ட அளவில் மாணவர்களை விட மாணவிகள்தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் யாரும் மாநில அளவில் இடம் பிடிக்கவில்லை. 1, 2 மார்க்குகளில் கோட்டை விட்டவர்களும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களையும் மாணவிகள் பிடித்து இருப்பது கடலூர் மாவட்டத்துக்கு பெருமையாக இருக்கிறது.  இதற்கு முன்பு கடந்த 2006–ம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் மாநில அளவில் 3–வது இடத்தை பிடித்தார். அதன் பின்னர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் 7 மாணவிகள் மாநில அளவில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior