உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




குறும்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறும்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 02, 2012

"தானே புயலின் அறுவடை" குறும்பட சி.டி. மத்திய அமைச்சரிடம் அளித்தார் இயக்குநர் தங்கர்பச்சான்


புயல் தொடர்பான குறும்பட சி.டி.யை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் வியாழக்கிழமை வழங்குகிறார் திரைப்பட இயக்குநர்  தங்கர்பச்சான்
      
           தானே  புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வி.நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோரை தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.  புயல் பாதித்த இடங்களில் மறுவாழ்வுத் திட்டங்களை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எந்தப்பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.  கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய "தானே' புயல் பாதிப்பு குறித்த 35 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தை தங்கர்பச்சான் தயாரித்து இயக்கி உள்ளார்.
 
          "தானே புயலின் அறுவடை' என்று அந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.  அந்தக் குறும்பட சி.டி-யை (குறுந்தகடு) தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரிடம் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் அளித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்தார். "தானே' புயல் பாதிப்பு பற்றி ஜெயந்தி நடராஜனிடம் விளக்கிய அவர் தமது குறும்பட சி.டி-யையும் அளித்தார். 
 
 பின்னர் தங்கர்பச்சான் அளித்த பேட்டி:  
 
            "தானே' புயலால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, பலாப்பழம், தென்னை, புளியமரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகை மரங்கள் மீண்டும் வளர குறைந்தது ஆறு முதல் எட்டு வருடங்கள் ஆகும். இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களின் வருமானத்தை நம்பி அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் நடைபெற திட்டமிட்டிருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்த குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் இல்லை. அதனால் புயலால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளின் பள்ளிக்கூட கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.  தற்போது புயல் பாதித்த இடங்களில் நிலத்தடி நீர் 600 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. பிரச்னையின் தீவிரம் கருதி, கடலூர்-பரங்கிப்பேட்டை இடையே புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது.  மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
 
            அப்பணியில் பெண்கள் ஈடுபட்டு வருதால் காலதாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் புயல் பாதிப்பின் தாக்கம் தெரியவரும். மக்களுக்கு நிரந்தர மறுவாழ்வுத் திட்டங்களை அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வருகிறேன். அவர்களும் கனிவாக கேட்டு கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியது நம்பிக்கை அளிக்கிறது என்று தங்கர்பச்சான் கூறினார்.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், ஜனவரி 19, 2012

கடலூர் மாவட்ட தானே புயல் சேதம் பற்றிய குறும்படம் தயாரிப்பு

     கடலூர் தானே புயல் பாதிப்பு பற்றிய குறும்படத்தை தயாரித்து இருப்பதாக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறினார்.


இதுகுறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறியது

           கடலூர், விழுப்புரம் பகுதியில்  தானே' புயலால் ஏற்பட்டது பாதிப்பு அல்ல, பேரழிவு. அந்த பகுதி மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சேகரித்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், விவசாய அழிவுகளை குறும்படமாக படம் பிடித்து வந்திருக்கிறேன்.

            எல்லாவற்றுக்கும் சாட்சியாக இந்த படம் அமையும். அரசியல்வாதிகளுக்கும், தமிழக அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பும் விதமாக இந்த படம் அமையும். கடலூர் பகுதியில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம் குறித்து முதல் அமைச்சரிடம் அதிகாரிகள் சரிவர சொல்லவில்லை என்பது தான் உண்மை.

குடிநீர், பால், மின்சாரம் எதுவும் அந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்கள் கடையும் இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் 100 சதவீதம் திறந்து உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

              கடலூர், விழுப்புரம் பகுதியில் சிறப்பு செயலாக்கத்துறையை அமைத்து, இந்த பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறையும் இதை செயல்படுத்தி, மக்களின் நிலையை கண்காணிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் உயரும் வரை சலுகை விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.













Read more »

வியாழன், அக்டோபர் 14, 2010

பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை

பண்ருட்டி:
 
                    பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என மனித உரிமை மேடை என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், மனிதநேய மக்கள் நலத் தொண்டர் விருது வழங்கும் விழா பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 
 
மனித உரிமை மேடை கழகத் தலைவர் இ. கேசவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
 
                            டோல் கேட் முறையை அமல்படுத்தி கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை போக்க பண்ருட்டியில் புறவழிச் சாலையை அமைக்க வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க கெடிலம் நதியில் தடுப்பணை கட்ட வேண்டும். பண்ருட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவின் போது 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. 40 பேர் ரத்ததானம் செய்தனர்.   
 
                         குறும்பட இயக்குநர் ச. பிரின்சு என்னாரசு பெரியார், பண்ருட்டி வட்டாட்சியர் பி. பன்னீர்செல்வம், நெய்வேலி தாய் தொண்டு மைய நிறுவனர் ராசி. ஜெகதீஸ்வரன் ஆகிய  மூன்று பேருக்கு மனிதநேய மக்கள் நலத்தொண்டர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது "திற' என்கிற குறும்படம் திரையிடப்பட்டது. மாநில அமைப்புச் செயலர் ஆர். வைத்தியலிங்கம் வரவேற்றார், அமைப்பு செயலர் ஏ. சாதுல்லாகான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கழக பொதுச்செயலர் அ. பக்ருதீன் செய்திருந்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior