பண்ருட்டி:
பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என மனித உரிமை மேடை என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், மனிதநேய மக்கள் நலத் தொண்டர் விருது வழங்கும் விழா பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
மனித உரிமை மேடை கழகத் தலைவர் இ. கேசவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
டோல் கேட் முறையை அமல்படுத்தி கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை போக்க பண்ருட்டியில் புறவழிச் சாலையை அமைக்க வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க கெடிலம் நதியில் தடுப்பணை கட்ட வேண்டும். பண்ருட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவின் போது 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. 40 பேர் ரத்ததானம் செய்தனர்.
குறும்பட இயக்குநர் ச. பிரின்சு என்னாரசு பெரியார், பண்ருட்டி வட்டாட்சியர் பி. பன்னீர்செல்வம், நெய்வேலி தாய் தொண்டு மைய நிறுவனர் ராசி. ஜெகதீஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கு மனிதநேய மக்கள் நலத்தொண்டர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது "திற' என்கிற குறும்படம் திரையிடப்பட்டது. மாநில அமைப்புச் செயலர் ஆர். வைத்தியலிங்கம் வரவேற்றார், அமைப்பு செயலர் ஏ. சாதுல்லாகான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கழக பொதுச்செயலர் அ. பக்ருதீன் செய்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக