உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சமையல் எரிவாயு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் எரிவாயு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

கடலூரில் கேஸ் விநியோக குளறுபடி: நுகர்வோர் அவதி




கேஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து சிலிண்டர் விநியோகிப்பதைவிட, ஏஜென்ஸிகளுக்கு நுகர்வோர் நேராகச் சென்று பணம் செலுத்தி, அவர்களாகவே சேமிப்புக்கிடங்கிலிருந்து பெற்றுகொள்கிரர்கள் 
 
கடலூர்:
 
              சமையல் கேஸ் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, கடலூர் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  
 
              கடலூரில் உள்ள சமையல் கேஸ் விநியோக ஏஜென்ஸிகளில் சிலிண்டர் வழங்கப்பட்ட நாளில் இருந்து 21-வது நாள்தான் மறு சிலிண்டருக்குப் பதிவு செய்ய முடியும் என்கிறார்கள் அதற்காக கணினியில் மென்பொருளையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சிலிண்டர் வழங்கப்பட்ட மறுநாளே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்யலாம் என்று கேஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.  

              கடலூரில் எந்த ஏஜென்ஸியும் 21-வது நாளில் பதிவு செய்வதில்லை. பதிவு செய்ய தொலைபேசியில் தொடர்பு கொண்டால், தொடர்ந்து 3 நாள்கள் கூட என்கேஜ்டு டோன்தான் கிடைக்கிறது. பலர் தொலைபேசி ரிசீவரை எடுத்து வைத்து விடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. 21-வது நாளில் பதிவு செய்தாலும் மறுநாளே சிலிண்டர் வழங்குவது இல்லை. பதிவு செய்து 10 நாள் கழித்தே பல ஏஜென்ஸிகள் சிலிண்டர் வழங்குகின்றன. அவ்வாறு காலம் கடந்து வழங்கப்பட்ட தேதியில் இருந்து 21 நாள் கழித்துத்தான் மீண்டும் பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள்.  
 
             பல நேரங்களில் சிலிண்டர் வழங்கப்பட்ட தேதியும், பில் போடப்பட்ட தேதியும் ஒன்றாக இருப்பது இல்லை. குறிப்பிட்ட தேதியில் பில் போட்டு, அதற்கு 3 அல்லது 4 நாள்கள் கழித்து சிலிண்டர் விநியோகம் செய்கிறார்கள். மேலும் சிலிண்டர் கொண்டு வரும் ஊழியர்கள் ரூ. 15 முதல் ரூ. 25 வரை கூடுதலாகப் பணம் வசூலிக்கிறார்கள். மறுத்தால் அடுத்த முறை சிலிண்டர் விநியோகம் மேலும் தாமதம் ஆகிறது.   தற்போதெல்லாம் கடலூரில் கேஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து சிலிண்டர் விநியோகிப்பதைவிட, ஏஜென்ஸிகளுக்கு நுகர்வோர் நேராகச் சென்று பணம் செலுத்தி, அவர்களாகவே சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று தங்கள் வாகனங்களில் சிலிண்டர்களை எடுத்துவரும் ஆபத்தான நிலை அதிகரித்து வருகிறது.  
 
                  பல ஊர்களில் கேஸ் ஏஜென்ஸிகள் 3 ஆண்டுகளுக்கு மாதாந்திர டோக்கன்களை வழங்கத் தொடங்கி உள்ளன. கடலூரில் சில விநியோகஸ்தர்கள், இன்னும் இந்த டோக்கன்களை வழங்கவில்லை. ஆனால் ரேஷன் கார்டை காண்பித்து, டோக்கன் வாங்கினால்தான் சிலிண்டருக்குப் பதிவு செய்ய முடியும் என்று தொலைபேசியில் மிரட்டுகிறார்கள். ஆனால் 3 ஆண்டுகளுக்குத் தேவையான டோக்கன்களை வழங்கினால் அவற்றை எப்படி பாதுகாப்பது என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன்.  
 
               கடலூரில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள், ஆம்னி வேன்கள் கேஸ் மூலம் இயக்கப் படுகின்றன. கடலூரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் வசதி இன்னமும் வரவில்லை. அப்படி இருக்க ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு கேஸ் எங்கிருந்து கிடைக்கிறது. அது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் சமைல் கேஸ்தான் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் நிஜாமுதீன்.  மேலும் டீக்கடைகள், ஹோட்டல்களில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற புகார் நீண்டகாலமாக உள்ளது.  
 
             குறைகளை கேஸ் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி எண்களை தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த எண்களில் தொடர்பு கொண்டால், பெரும்பாலும் யாரும் பதில் சொல்வது இல்லை என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள். வட்ட வாரியாக கேஸ் நுகர்வோர் கூட்டங்களை, விநியோகத்துறை அதிகாரிகள் நடத்துகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு கேஸ் எஜென்ஸிகளின் பிரதிநிதிகளோ, கேஸ் நிறுவன அதிகாரிகளோ வருவதில்லை என்று நுகர்வோர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இக்கூட்டங்களில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு தீர்வே கிடைப்பது இல்லை. 
 
                 கடலூரில் மகந்தா கேஸ் ஏஜென்ஸி அலுவலகத்துக்கு (மாடி) செல்லும் வழி ஸ்பைரல் படிக்கட்டுகளாக உள்ளன. மிகவும் குறுகலான இந்தப் படிக்கட்டுகளில் ஒருவர் மேலே ஏறிச் சென்றால், அதே நேரத்தில் மற்றொருவர் கீழே இறங்கி வர வாய்ப்பு இல்லை.  சில கேஸ் ஏஜென்ஸிகளில், அவற்றின் ஊழியர்களால் நுகர்வோர் அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த ஏஜென்ஸிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாததால், நுகர்வோர் அமரக்கூட வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம். 

Read more »

திங்கள், ஆகஸ்ட் 30, 2010

குறிஞ்சிப்பாடியில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

நெய்வேலி:

            குறிஞ்சிப்பாடி வட்டம் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.தேவராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் நுகர்வோர் கூறிய குறைகள்: 

              தொலைபேசி மூலம் பதிவு செய்யும்போது, முகவர் அலுவலக ஊழியர்கள் மரியாதைக் குறைவாக பேசுகின்றனர், ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டோக்கன் முறைக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர், 21 நாள்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்யவேண்டும் என்று கெடுபிடி செய்கின்றனர், அவ்வாறு பதிவுசெய்தாலும் குறைந்தபட்சம் 50 நாள்களுக்குப் பிறகே சிலிண்டர் சப்ளை செய்கின்றனர் என்று கூறினர்.

இவற்றை கேட்டுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் கூறுகையில், 

               ""சிலிண்டர் பதிவுக்கு 21 நாள் காலஅவகாசம் தேவை என்று எந்த உத்தரவும் கிடையாது. டோக்கன் முறை உங்களது வசதிக்காவே கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் சரியாக நடந்துகொண்டால் தவறு நடக்க வாய்ப்பில்லை. மேலும் முகவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனினும் முகவர்கள் நுகர்வோரிடம் மரியாதையாக நடந்துகொள்வது அவசியம்'' என்று கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டார். வாடிக்கையாளர் அதிருப்தி: இந்நிலையில் கூட்டத்துக்கு வந்திருந்த நுகர்வோர், இக் கூட்டம் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டுள்ளது என்று குறைகூறினர். 

                 ""இவ்வுளவு குறைகளை நாங்கள் கூறிய பின்னரும், முகவருக்காக வக்காலத்து வாங்குகிறார். அரசு விதித்துள்ள நடைமுறைகளை செயல்படுத்தாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் முகவர்களை எச்சரிக்கவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவரிடம் நீங்களே போய் கேளுங்கள், அப்போது தான் விமோசனம் பிறக்கும் என்கிறார். டோர் டெலிவரி செய்யாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கத் தயங்கும் அலுவலரின் செயல் முகவர்களுக்கு ஆதரவான நிலையையே காட்டுகிறது'' என்று விரக்தியுடன் கூறிவிட்டுச் சென்றனர். 

                       இக் கூட்டம் 150 சதுரஅடி பரப்பளவு அறைக்குள் நடத்தப்பட்டதால் பெரும்பாலான நுகர்வோர் அறைக்கு வெளியிலேயே நிற்கவேண்டியிருந்தது.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

டீக்கடைகளில் பயன்படுத்திய சமையல் எரிவாயு பறிமுதல்: ஒருவர் கைது

கடலூர்:

              கடலூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட, வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களை கைப்பற்றினர்.

              கடலூரில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர்கள் முறைகேடாக டீக்கடைகள், ஹோட்டல்கள், தொழிலகங்கள் மற்றும் ஆட்டோக்கள், கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் பணம் கிடைப்பதால், கேஸ் விநியோகஸ்தர்கள் வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர்களை டீக்கடைகள் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்கு அளித்து விடுகிறார்கள். இதனால் வீட்டு உபயோகத்துக்கு சமையல் கேஸ் கிடைப்பதில் காலதாமதமும், தட்டுப்பாடும் ஏற்படுகிறது. கடலூர் புதுநகர் போலீசார் மஞ்சக்குப்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட 5 வீட்டு உபயோக சிலிண்டர்களைப் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் சஞ்சீவிநாதன் (60) கைது செய்யப்பட்டார்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம்... வசூல்! அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் அவலம்

 பண்ருட்டி: 

                    வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கு அரசு நிர்ணய விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதால் நுகர்வோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். 

                       ஒவ்வொரு குடும்பத்திறகும் சமையல் எரிவாயு இணைப்பு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சமையல் காஸ் சிலிண்டர் களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனை பெட்ரோலிய நிறுவனங்கள் நேரடியாக ஏஜென்சிகளை நியமித்து காஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர்களை வினியோகிக்கின்றனர். இதன்படி கடலூர் மாவட்டத்தில் 10 ஏஜென்சிகள் மூலம் சுமார் இரண்டு லட்சம் இணைப்புகள் உள்ளன. தற்போது தமிழக அரசு காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவசமாக காஸ் இணைப்புகளை வழங்கி வருகிறது.  இதனால் காஸ் இணைப்புதாரர்களின் எண்ணிக்கை அதிகாரித் துள்ளதால் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட் டுப்பாட்டை பல ஏஜென்சிகள் தங்களுக்கு  சாதகமாக்கிக் கொண்டு சிலிண்டர்களுக்கு அரசு நிர்ணய கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். 

                வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றுக்கு 320 ரூபாய் 25 பைசா என பில் வழங்கப்படுகிறது. ஆனால் நகர பகுதி நுகர் வோர்களிடம் 335 ரூபாயிலிருந்து 340 வரையிலும், கிராம பகுதிகளில் 350 ரூபாயும் வசூலிக்கின்றனர். கூடுதல் கட்டணம் குறித்து கேட்டால் 'டெலிவரி' சார்ஜ் எனக் கூறுகின்றனர். இவை அனைத் திற்கும் மேலாக 21 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் எனக் கூறப்பட்ட போதிலும், ஒரு சில ஏஜென்சிகளை தவிர பெரும்பாலான ஏஜென்சிகள் 30 நாள் முதல் 40 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் வழங்கி வருகின்றனர். 

                 குறிப்பாக கிராமப்பகுதி இணைப்புதாரர்களுக்கு பலமுறை  அலைக்கழிக்கப்பட்ட பிறகே சிலிண்டர் வழங்கப்படுகிறது. கிராம காஸ் இணைப்புதாரர்கள் சிலிண்டர் பதிவு  செய்வதற்காக அந்தந்த பகுதி ஏஜென்சிகள் கிளை அலுவலகங்களை திறந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான  கிளை அலுவலகங்கள் திறப்பதில்லை.  பண்ருட்டியில் உள்ள ஒரு ஏஜென்சி புதிய இணைப்பு பெறும்போது இரு  சிலிண்டருக்கு 2,500 ரூபாய்,லோடு சிலிண்டர் 2க்கு 642, புத்தகத்திற்கு 100ம், ரெகுலேட்டர் 150ம், டியூப் 70ம்,   இணைப்பு கட்டணம் 200ம் என மொத்தம் 3,662 மட்டுமே பெற வேண்டும். ஆனால் சிலிண்டர் இணைப்பு கட்டணம் மொத்தம் 3,662ம் காஸ் அடுப்பு 2,800ம்,குக்கர் 1,050ம், ரீபைண்ட் ஆயில் 5 லிட்டர் 350ம்,  மைசூர் சாண்டல் சோப், டிபன் கேரியர் சேர்த்து 8,200 பெற்றுக் கொண்டு இணைப்பு வழங்குகின்றனர். வெளியூர் மற்றும் மற்ற ஏஜென்சியில் இருந்து மாற்றம் செய்பவர்களிடம் 450 ரூபாய் கட்டாய வசூல் செய்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் கண்டுக் கொள்வதில்லை. கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பண்ருட்டியில் காஸ் இணைப்புதாரர் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சிலிண்டர் இணைப்பு புதிதாக பெறும் போது இணைப்பிற்கான தொகை மட்டுமே செலுத் தினால் போதும். வேறு எந்த பொருளையும் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோன்று சிலிண்டர் களுக்கு பில் தொகை மட் டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால் பண்ருட்டி பகுதியில்  தொடர்ந்து சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே நிலைதான் மாவட்டத்தின் பிற  பகுதிகளிலும் நிலவி வருகிறது.  மத்திய அரசு கிராமப் புற மக்களை மேம்படுத்த 110 ரூபாய் சிலிண்டருக்கு  வழங்குகிறது. அதனை காஸ் நிறுவனங்கள் வெளி மார்க்கெட்டில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.  

பொதுமக்களின புகார் குறித்து பாரத் பெட்ரோலிய காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல மேலாளர் ஜெயராமனிடம் கேட்டபோது, 

                   'சிலிண்டர் தேவையின் போது நுகர்வோர் கோரியபடி பதிவு செய்ய வேண்டும். சிலிண்டர் சப்ளையில் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் எங்களது தஞ்சாவூர் அலுவலக போன் 04362-221475, சேல்ஸ் ஆபிசர் மொபைல் எண். 94425-03567க்கு தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior