உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 04, 2011

கடலூரில் கேஸ் விநியோக குளறுபடி: நுகர்வோர் அவதி




கேஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து சிலிண்டர் விநியோகிப்பதைவிட, ஏஜென்ஸிகளுக்கு நுகர்வோர் நேராகச் சென்று பணம் செலுத்தி, அவர்களாகவே சேமிப்புக்கிடங்கிலிருந்து பெற்றுகொள்கிரர்கள் 
 
கடலூர்:
 
              சமையல் கேஸ் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, கடலூர் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  
 
              கடலூரில் உள்ள சமையல் கேஸ் விநியோக ஏஜென்ஸிகளில் சிலிண்டர் வழங்கப்பட்ட நாளில் இருந்து 21-வது நாள்தான் மறு சிலிண்டருக்குப் பதிவு செய்ய முடியும் என்கிறார்கள் அதற்காக கணினியில் மென்பொருளையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சிலிண்டர் வழங்கப்பட்ட மறுநாளே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்யலாம் என்று கேஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.  

              கடலூரில் எந்த ஏஜென்ஸியும் 21-வது நாளில் பதிவு செய்வதில்லை. பதிவு செய்ய தொலைபேசியில் தொடர்பு கொண்டால், தொடர்ந்து 3 நாள்கள் கூட என்கேஜ்டு டோன்தான் கிடைக்கிறது. பலர் தொலைபேசி ரிசீவரை எடுத்து வைத்து விடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. 21-வது நாளில் பதிவு செய்தாலும் மறுநாளே சிலிண்டர் வழங்குவது இல்லை. பதிவு செய்து 10 நாள் கழித்தே பல ஏஜென்ஸிகள் சிலிண்டர் வழங்குகின்றன. அவ்வாறு காலம் கடந்து வழங்கப்பட்ட தேதியில் இருந்து 21 நாள் கழித்துத்தான் மீண்டும் பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள்.  
 
             பல நேரங்களில் சிலிண்டர் வழங்கப்பட்ட தேதியும், பில் போடப்பட்ட தேதியும் ஒன்றாக இருப்பது இல்லை. குறிப்பிட்ட தேதியில் பில் போட்டு, அதற்கு 3 அல்லது 4 நாள்கள் கழித்து சிலிண்டர் விநியோகம் செய்கிறார்கள். மேலும் சிலிண்டர் கொண்டு வரும் ஊழியர்கள் ரூ. 15 முதல் ரூ. 25 வரை கூடுதலாகப் பணம் வசூலிக்கிறார்கள். மறுத்தால் அடுத்த முறை சிலிண்டர் விநியோகம் மேலும் தாமதம் ஆகிறது.   தற்போதெல்லாம் கடலூரில் கேஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து சிலிண்டர் விநியோகிப்பதைவிட, ஏஜென்ஸிகளுக்கு நுகர்வோர் நேராகச் சென்று பணம் செலுத்தி, அவர்களாகவே சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று தங்கள் வாகனங்களில் சிலிண்டர்களை எடுத்துவரும் ஆபத்தான நிலை அதிகரித்து வருகிறது.  
 
                  பல ஊர்களில் கேஸ் ஏஜென்ஸிகள் 3 ஆண்டுகளுக்கு மாதாந்திர டோக்கன்களை வழங்கத் தொடங்கி உள்ளன. கடலூரில் சில விநியோகஸ்தர்கள், இன்னும் இந்த டோக்கன்களை வழங்கவில்லை. ஆனால் ரேஷன் கார்டை காண்பித்து, டோக்கன் வாங்கினால்தான் சிலிண்டருக்குப் பதிவு செய்ய முடியும் என்று தொலைபேசியில் மிரட்டுகிறார்கள். ஆனால் 3 ஆண்டுகளுக்குத் தேவையான டோக்கன்களை வழங்கினால் அவற்றை எப்படி பாதுகாப்பது என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன்.  
 
               கடலூரில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள், ஆம்னி வேன்கள் கேஸ் மூலம் இயக்கப் படுகின்றன. கடலூரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் வசதி இன்னமும் வரவில்லை. அப்படி இருக்க ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு கேஸ் எங்கிருந்து கிடைக்கிறது. அது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் சமைல் கேஸ்தான் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் நிஜாமுதீன்.  மேலும் டீக்கடைகள், ஹோட்டல்களில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற புகார் நீண்டகாலமாக உள்ளது.  
 
             குறைகளை கேஸ் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி எண்களை தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த எண்களில் தொடர்பு கொண்டால், பெரும்பாலும் யாரும் பதில் சொல்வது இல்லை என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள். வட்ட வாரியாக கேஸ் நுகர்வோர் கூட்டங்களை, விநியோகத்துறை அதிகாரிகள் நடத்துகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு கேஸ் எஜென்ஸிகளின் பிரதிநிதிகளோ, கேஸ் நிறுவன அதிகாரிகளோ வருவதில்லை என்று நுகர்வோர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இக்கூட்டங்களில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு தீர்வே கிடைப்பது இல்லை. 
 
                 கடலூரில் மகந்தா கேஸ் ஏஜென்ஸி அலுவலகத்துக்கு (மாடி) செல்லும் வழி ஸ்பைரல் படிக்கட்டுகளாக உள்ளன. மிகவும் குறுகலான இந்தப் படிக்கட்டுகளில் ஒருவர் மேலே ஏறிச் சென்றால், அதே நேரத்தில் மற்றொருவர் கீழே இறங்கி வர வாய்ப்பு இல்லை.  சில கேஸ் ஏஜென்ஸிகளில், அவற்றின் ஊழியர்களால் நுகர்வோர் அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த ஏஜென்ஸிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாததால், நுகர்வோர் அமரக்கூட வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior