உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சிமென்ட் விலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிமென்ட் விலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 25, 2011

கடலூரில் கட்டுமானப் பொருள்கள் விலை கடும் உயர்வு


கடலூர்:

              கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, கீழ்நிலையில் இருப்போர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை, நிராசையாக, கனவாகவே கலைந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது.  

                   கடலூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு லாரி செங்கல் (4 ஆயிரம் செங்கல்) விலை லாரி வாடகை, ஆள் கூலி உள்பட ரூ. 8,500 ஆக இருந்தது. இது ஜனவரி மாதத்தில் ரூ. 26 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போது செங்கல் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. ஒரு லாரி செங்கல் ரூ. 16 ஆயிரமாகக் குறைந்துள்ளது.  ஆற்று மணல் விலை கடலூரில், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லாரி (3 யூனிட்) ரூ. 2 ஆயிரமாக இருந்தது. பின்னர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஆறுகளில் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு லாரி மணல் ரூ. 6 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போதும் ரூ. 7 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.  

              பெண்ணை ஆற்றில் எங்கும் மணல் குவாரி இல்லை. இதனால் சேத்தியாத்தோப்பில் இருந்தும், பெண்ணாடத்தில் இருந்தும் கடலூருக்கு மணல் வருவதால், ஆற்று மணல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் மாட்டு வண்டி ரூ. 600 ஆக உள்ளது.  கருங்கல் ஜல்லி ஒரு லாரி (அதிகமாக பயன்படுத்தும் முக்கால் அங்குல ஜல்லி) 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 6,500 ஆக இருந்தது ரூ. 9,500 ஆக உயர்ந்து விட்டது. இரும்புக் கம்பி விலை கிலோ ரூ. 36 ஆக இருந்தது ரூ. 42 ஆக உயர்ந்து விட்டது. சிமென்ட் விலையும் மூட்டைக்கு ரூ. 25 அதிகரித்து, மூட்டை ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.  

           மின்சார கம்பிகள், மின் சாதனங்கள், தரை ஓடுகள் மற்றும் இதர கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள், கடந்த 10 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்து இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  கட்டுமான வேலைக்கு கொத்தனார், சித்தாள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் உருவாகி இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள், மேஸ்திரிகள் கூறுகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பு கொத்தனார் சம்பளம் ரூ. 350 ஆக இருந்தது தற்போது ரூ. 420 முதல் ரூ. 450 வரை உயர்ந்து உள்ளது. சித்தாள் கூலி ரூ. 200 ல் இருந்து ரூ. 300 ஆக உயர்ந்து விட்டது என்றும் தெரிவிக்கிறார்கள். 

                தரை ஓடு பதித்தல் போன்ற பணிகளுக்கு நாள் கூலி ரூ. 600 ஆக உயர்ந்து இருக்கிறது.  மேலும் கடந்த ஓராண்டில், வீட்டு நிலங்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. கடலூரில் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளில், வீட்டு நிலங்களில் விலை குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ. 250. நகர் புறங்களில் குறைந்த விலை சதுர அடிக்கு ரூ. 450. நெடுஞ்சாலை ஓரம் உள்ள நிலங்களின் குறைந்தபட்ச விலை சதுர அடிக்கு ரூ. 2,500.  கடலூரில் வீடுகள் கட்டுவதற்கான குறைந்தபட்ச செலவு சதுர அடிக்கு ரூ. 1,300. ஆனால் வங்கிகள் சதுர அடிக்கு ரூ. 1,000 என்று செலவை நிர்ணயம் செய்து, அதில் 80 சதவீதம் மட்டும் கடனாக வழங்குகின்றன. 

         இத் தொகையைக் கொண்டு நடுத்தர மக்களும், கீழ்நிலையில் இருக்கும் பலரும் வீடு கட்டுவது என்பது சாத்தியம் அற்றதாக மாறியிருக்கிறது.  கடலூரில் தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. தற்போதுதான் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.  

இதுகுறித்து கடலூர் மாவட்ட கட்டுமானப் பொறியாளர் சங்க துணைத் தலைவர் ராஜா கூறுகையில், 

            கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம், வீடுகள் கட்டும் பணிகளை பெரும்பாலும் முடக்கி விட்டன. தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடந்த கட்டுமானப் பணிகள் தற்போதுதான் தொடங்கி இருக்கின்றன. கட்டுமானப் பொருள்கள் விலை, ஆள் கூலி உயர்வு காரணமாக, பலர் வீடு கட்ட முன்வருவதில்லை. உயர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் மற்றும் பணக்காரர்கள்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது.  

           வங்கிகள் கடலூரில் கட்டுமானச் செலவு சதுர அடிக்கு ரூ. 1,000 எனக் கணக்கிட்டு, அதில் 80 சதவீதம் மட்டுமே கடன் வழங்குகிறது. இதனால் வங்கிக் கடனை மட்டும் நம்பி, வீடுகட்ட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. ஓராண்டுக்கு முன் ரூ. 10 லட்சத்தில் கட்டிய வீட்டை, தற்போது ரூ. 20 லட்சம் செலவிட்டால்தான் கட்ட முடியும். சொந்த வீடு என்பது நடுத்தர மக்களுக்கு கனவாகத்தான் உள்ளது என்றார் பொறியாளர் ராஜா.  

Read more »

வெள்ளி, அக்டோபர் 22, 2010

ஆலை உரிமையாளர்கள் கூட்டணியால் சிமென்ட் விலை உயர்வு: பொன்.குமார்


பண்ருட்டி:

                  சிமென்ட், செங்கல் விலை எந்த முகாந்தரமும் இல்லாமல் உயர்ந்துள்ளதற்கு ஆலை உரிமையாளர்கள் கூட்டணி அமைத்து கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் விலை ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் கூறினார்.

பண்ருட்டியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் பேசியது:

                    கட்டுமான உயர் பயிலரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அக்டோபர் 30-ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இதில் தமிழகத்தில் இருந்து 50,000 பேர் கலந்து கொள்வர்.இந்த கட்டுமான உயர் பயிலரங்கத்தின் மூலம் ஏற்கெனவே கட்டுமானத் தொழிலில் உள்ளவர்களின் பணித் திறனை மேம்படுத்தவும், நவீன வளர்ச்சிக்கு ஏற்ப கட்டுமானத் தொழிலில் பயிற்சி பெற உதவும்.

                    இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பிளம்பர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், கொத்தனார், பெயிண்டர் என பயிற்சி அளிக்கப்பட்டு அரசு சான்றிதழ் அளிக்கப்படும்.இந்த சான்றிதழ் பெற்றவர்கள் பெரிய கட்டுமான நிறுவனத்தில் பணியில் சேரவும், வெளிநாடு செல்லவும் உதவும், சுயத்தொழில் செய்ய வங்கிக்கடனும் கிடைக்கும்.கட்டுமான மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டையை கொண்டு மருத்துவ சிகிச்சை பெறலாம் என அறிவித்த தமிழக முதல்வருக்கு விழாவில் நன்றி தெரிவிக்கவுள்ளோம்.

                    மேலும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை இந்த விழாவில் முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.கட்டுமான பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 25 நாள்களுக்கு முன்னர்  150 விற்பனையான சிமென்ட் தற்போது  290 விற்பனையாகிறது.மின் கட்டணம் உயரவில்லை, புதிய வரிவிதிப்பு இல்லை, டீசல், பெட்ரோல் விலை உயரவில்லை, தொழிலாளர் சம்பளம் உயரவில்லை.ஆனால் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆலை அதிபர்கள் கூட்டணி வைத்து விலை ஏற்றம் செய்துள்ளனர் என பொன்.குமார் கூறினார்.

Read more »

புதன், அக்டோபர் 13, 2010

கடலூர் மாவட்டத்தில் சலுகை விலையில் சிமென்ட் விற்பனை

கடலூர்: 

                தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சலுகை விலையில் சிமென்ட் விற் பனை துவங்கியுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட் டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் சிமென்ட் மூட்டை 200 ரூபாய்க்கு சலுகை விலையில்  விற் பனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக 1,000 சதுர அடி வரை வீடு கட்டுபவர்கள் சலுகை விலையில் சிமென்ட பெற்றிட உரிய வரைவு காசோலை மற்றும் ரேஷன் கார்டு நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அருகில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொடுத்து 8 தவணைகளில் சிமென்ட் மூட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் பழுது பார்க்க மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 50 மூட்டை சிமென் டுகளை நேரடியாக பணம் செலுத்தி பெறலாம். 

                       இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் கடலூர் (04142-233301), குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி (04142-253796), விருத்தாசலம் (04143-238382), சிதம்பரம் (04144-230802), காட்டுமன்னார்கோவில் (04144-262013), திட்டக்குடி (04143-255214) ஆகிய தொலைபேசிகளிலோ அல்லது கடலூரில் உள்ள மண்டல மேலாளரை (04142-221621, 221622, 221623) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more »

திங்கள், மார்ச் 08, 2010

கம்பி, சிமென்ட் விலை விர்ர்...!: வீடு கட்டுவோர் கலக்கம்

பண்ருட்டி:

                 கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமென்ட் விலை அதிகரிப்பால் வீடு கட்டுவோர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டுமான பொருட்களில் முக்கிய பொருட்களான சிமென்ட், கம்பிகளின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

              கம்பியின் மூலப்பொருட்கள் உலக வர்த்தகத்தில் கூடுதலாகியுள்ளதால் இரும்பு கம்பிகள் கிலோவிற்கு 6 ரூபாய் முதல் 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.  இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ அசோகா கம்பிகள் 28 ரூபாய்க்கு விற்றவை தற்போது 38 ரூபாயாகவும், அக்னி பிராண்ட் கம்பிகள் 33ல் இருந்து 41 ஆகவும் உயர்ந்துள்ளது.

                     சிமென்ட் உற்பத்தியில் போட்டி காரணமாக கடந்த இருமாதங்களுக்கு முன் சிமென்ட் மூட்டை 290 ரூபாயிலிருந்து 210 ஆக விலை குறைந்தது. செட்டிநாடு, சுவாரி, டால்மியா, கோரமண்டல், ராம்கோ, அல்டராடெக், பாரதி என ஒவ்வொரு கம்பெனி சிமென்டிற்கும் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை வித்தியாசம் இருந்தது.
                     தற்போது சிமென்ட் ஆலை உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து ஒரே விலை 257ல் 7 ரூபாய் கழித்து 250 ரூபாயிற்கு நிர்ணயம் செய்துள்ளதால் தற்போது சிமென்ட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மேலும், அனைத்து கம்பெனி சிமென்டுகளும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கட்டுமான பணிகளில் ஈடுபடும் நிறுவனத்திற்கு லோடு கணக்கில் குறைந்த விலையில் சிமென்ட் கம்பெனியினர் விற்பனை செய்து வந்தனர். அதுவும் தற்போது நிறுத்தியுள்ளனர்.

                   கட்டுமான பணிகள் சுணக்க நிலையில் உள்ளபோதும் செயற்கையாக சிமென்ட் விலையை உயர்த்தியுள்ளதாக கட்டுமான பொறியாளர்கள், வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு சிமென்ட், இரும்பு கம்பிகள் விலைகள் வெகுவாக குறைந்ததால், பலர் வீடு கட்ட திட்டமிட்டு பணியை துவக்கியவர்கள், தற்போது திட்ட மதிப்பீட்டை விட கூடுதல் செலவு ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதால் "திரிசங்கு' நிலையில் உள்ளனர்.

               மேலும் கம்பி, சிமென்ட் விலைகள் குறையும் என ஒப்பந்தம் செய்த கட்டுமான நிறுவனங்களும் பெருமளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கம்பி, சிமென்ட் விலைகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior