பண்ருட்டி:
கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமென்ட் விலை அதிகரிப்பால் வீடு கட்டுவோர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டுமான பொருட்களில் முக்கிய பொருட்களான சிமென்ட், கம்பிகளின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.
கம்பியின் மூலப்பொருட்கள் உலக வர்த்தகத்தில் கூடுதலாகியுள்ளதால் இரும்பு கம்பிகள் கிலோவிற்கு 6 ரூபாய் முதல் 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ அசோகா கம்பிகள் 28 ரூபாய்க்கு விற்றவை தற்போது 38 ரூபாயாகவும், அக்னி பிராண்ட் கம்பிகள் 33ல் இருந்து 41 ஆகவும் உயர்ந்துள்ளது.
சிமென்ட் உற்பத்தியில் போட்டி காரணமாக கடந்த இருமாதங்களுக்கு முன் சிமென்ட் மூட்டை 290 ரூபாயிலிருந்து 210 ஆக விலை குறைந்தது. செட்டிநாடு, சுவாரி, டால்மியா, கோரமண்டல், ராம்கோ, அல்டராடெக், பாரதி என ஒவ்வொரு கம்பெனி சிமென்டிற்கும் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை வித்தியாசம் இருந்தது.
தற்போது சிமென்ட் ஆலை உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து ஒரே விலை 257ல் 7 ரூபாய் கழித்து 250 ரூபாயிற்கு நிர்ணயம் செய்துள்ளதால் தற்போது சிமென்ட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மேலும், அனைத்து கம்பெனி சிமென்டுகளும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கட்டுமான பணிகளில் ஈடுபடும் நிறுவனத்திற்கு லோடு கணக்கில் குறைந்த விலையில் சிமென்ட் கம்பெனியினர் விற்பனை செய்து வந்தனர். அதுவும் தற்போது நிறுத்தியுள்ளனர்.
கட்டுமான பணிகள் சுணக்க நிலையில் உள்ளபோதும் செயற்கையாக சிமென்ட் விலையை உயர்த்தியுள்ளதாக கட்டுமான பொறியாளர்கள், வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு சிமென்ட், இரும்பு கம்பிகள் விலைகள் வெகுவாக குறைந்ததால், பலர் வீடு கட்ட திட்டமிட்டு பணியை துவக்கியவர்கள், தற்போது திட்ட மதிப்பீட்டை விட கூடுதல் செலவு ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதால் "திரிசங்கு' நிலையில் உள்ளனர்.
மேலும் கம்பி, சிமென்ட் விலைகள் குறையும் என ஒப்பந்தம் செய்த கட்டுமான நிறுவனங்களும் பெருமளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கம்பி, சிமென்ட் விலைகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக