உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

கடலூரில் கட்டுமானப் பொருள்கள் விலை கடும் உயர்வு


கடலூர்:

              கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, கீழ்நிலையில் இருப்போர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை, நிராசையாக, கனவாகவே கலைந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது.  

                   கடலூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு லாரி செங்கல் (4 ஆயிரம் செங்கல்) விலை லாரி வாடகை, ஆள் கூலி உள்பட ரூ. 8,500 ஆக இருந்தது. இது ஜனவரி மாதத்தில் ரூ. 26 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போது செங்கல் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. ஒரு லாரி செங்கல் ரூ. 16 ஆயிரமாகக் குறைந்துள்ளது.  ஆற்று மணல் விலை கடலூரில், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லாரி (3 யூனிட்) ரூ. 2 ஆயிரமாக இருந்தது. பின்னர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஆறுகளில் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு லாரி மணல் ரூ. 6 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போதும் ரூ. 7 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.  

              பெண்ணை ஆற்றில் எங்கும் மணல் குவாரி இல்லை. இதனால் சேத்தியாத்தோப்பில் இருந்தும், பெண்ணாடத்தில் இருந்தும் கடலூருக்கு மணல் வருவதால், ஆற்று மணல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் மாட்டு வண்டி ரூ. 600 ஆக உள்ளது.  கருங்கல் ஜல்லி ஒரு லாரி (அதிகமாக பயன்படுத்தும் முக்கால் அங்குல ஜல்லி) 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 6,500 ஆக இருந்தது ரூ. 9,500 ஆக உயர்ந்து விட்டது. இரும்புக் கம்பி விலை கிலோ ரூ. 36 ஆக இருந்தது ரூ. 42 ஆக உயர்ந்து விட்டது. சிமென்ட் விலையும் மூட்டைக்கு ரூ. 25 அதிகரித்து, மூட்டை ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.  

           மின்சார கம்பிகள், மின் சாதனங்கள், தரை ஓடுகள் மற்றும் இதர கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள், கடந்த 10 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்து இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  கட்டுமான வேலைக்கு கொத்தனார், சித்தாள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் உருவாகி இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள், மேஸ்திரிகள் கூறுகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பு கொத்தனார் சம்பளம் ரூ. 350 ஆக இருந்தது தற்போது ரூ. 420 முதல் ரூ. 450 வரை உயர்ந்து உள்ளது. சித்தாள் கூலி ரூ. 200 ல் இருந்து ரூ. 300 ஆக உயர்ந்து விட்டது என்றும் தெரிவிக்கிறார்கள். 

                தரை ஓடு பதித்தல் போன்ற பணிகளுக்கு நாள் கூலி ரூ. 600 ஆக உயர்ந்து இருக்கிறது.  மேலும் கடந்த ஓராண்டில், வீட்டு நிலங்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. கடலூரில் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளில், வீட்டு நிலங்களில் விலை குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ. 250. நகர் புறங்களில் குறைந்த விலை சதுர அடிக்கு ரூ. 450. நெடுஞ்சாலை ஓரம் உள்ள நிலங்களின் குறைந்தபட்ச விலை சதுர அடிக்கு ரூ. 2,500.  கடலூரில் வீடுகள் கட்டுவதற்கான குறைந்தபட்ச செலவு சதுர அடிக்கு ரூ. 1,300. ஆனால் வங்கிகள் சதுர அடிக்கு ரூ. 1,000 என்று செலவை நிர்ணயம் செய்து, அதில் 80 சதவீதம் மட்டும் கடனாக வழங்குகின்றன. 

         இத் தொகையைக் கொண்டு நடுத்தர மக்களும், கீழ்நிலையில் இருக்கும் பலரும் வீடு கட்டுவது என்பது சாத்தியம் அற்றதாக மாறியிருக்கிறது.  கடலூரில் தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. தற்போதுதான் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.  

இதுகுறித்து கடலூர் மாவட்ட கட்டுமானப் பொறியாளர் சங்க துணைத் தலைவர் ராஜா கூறுகையில், 

            கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம், வீடுகள் கட்டும் பணிகளை பெரும்பாலும் முடக்கி விட்டன. தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடந்த கட்டுமானப் பணிகள் தற்போதுதான் தொடங்கி இருக்கின்றன. கட்டுமானப் பொருள்கள் விலை, ஆள் கூலி உயர்வு காரணமாக, பலர் வீடு கட்ட முன்வருவதில்லை. உயர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் மற்றும் பணக்காரர்கள்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது.  

           வங்கிகள் கடலூரில் கட்டுமானச் செலவு சதுர அடிக்கு ரூ. 1,000 எனக் கணக்கிட்டு, அதில் 80 சதவீதம் மட்டுமே கடன் வழங்குகிறது. இதனால் வங்கிக் கடனை மட்டும் நம்பி, வீடுகட்ட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. ஓராண்டுக்கு முன் ரூ. 10 லட்சத்தில் கட்டிய வீட்டை, தற்போது ரூ. 20 லட்சம் செலவிட்டால்தான் கட்ட முடியும். சொந்த வீடு என்பது நடுத்தர மக்களுக்கு கனவாகத்தான் உள்ளது என்றார் பொறியாளர் ராஜா.  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior