உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திசு வாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திசு வாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 29, 2012

வாழைச் சாகுபடியில் புதிய சேமிப்பு முறைகள்


பதப்படுத்தப்படும் வாழைப்பழங்கள். பேக் செய்யப்பட்ட பழங்கள்.
சிதம்பரம்: 

           வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டு தாவரங்களைக் கொண்ட பேரினமாகும். உலகம் முழுவதும் வாழையின் தேவை வெகுவாக அதிகரித்து வருகிறது. சுமார் 9.6 மில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ள வாழை சந்தையில் நமது பங்களிப்பு 0.01 சதவீதம்தான்.
 
       கடந்த 2003-04-ல் வாழைப் பழங்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.11 கோடியில் இருந்து 2007-08ல் ரூ.26 கோடி ரூபாயாக உயர்ந்து, கடந்த ஆண்டு ரூ.55 கோடி வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சியம் தெரிவிக்கிறது. இந்நிலையில் வாழைப்பழத்தை புதிய முறையில் நீண்ட நாள்கள் கெடாமல் பதப்படுத்தி வாழை விவசாயிகள் ஏற்றுமதி செய்து அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.

         இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வாழையின் தேவை அதிகம் உள்ளதால், ஏற்றுமதியில் கவனம் இல்லை எனக் கூறப்பட்டாலும், உலக சந்தையில் 2015-ம் ஆண்டுக்குள் நமது பங்கை இரண்டு சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்குண்டான விரிவாக்க முயற்சிகள் தொடர்கின்றன தேசிய தோட்டக்கலை மிஷன் (சஏங) சில முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் ஆண்டொன்றுக்கு வாழை சாகுபடி 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது.
 
           2007-ல் 6,04,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வாழை 21 மில்லியன் டன் விளைச்சலைக் கொடுத்தது. இப்போது சாகுபடி பரப்பளவு 7,80,000 ஹெக்டேராக அதிகரித்து, விளைச்சலும் 27 மில்லியன் டன்களை தாண்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நேந்திரன், ரஸ்தாளி, பூவன், ரோபஸ்டா, சினிசம்பா, செவ்வாழை போன்ற பல ரகங்கள் பயிரிடப்பட்டாலும், அவற்றின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை சந்திக்க புதிய சேமிப்பு முறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

புதிய சேமிப்பு முறைகள்:

 வாழைப் பழங்களை உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய புதிய சேமிப்பு முறைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 மாறுபட்ட சூழலில் சேமிப்பு முறை: 

       வாழைப் பழங்களைப் பாதுகாக்க இந்த சேமிப்பு முறையில் மிகவும் குறைந்தளவு குளிரில் சேமிக்கப்படுகிறது. சுமார் 90 நாள்கள் வரை வாழைப் பழங்கள் இம்முறையில் பாதுகாக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய முடியும்.

         கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சேமிக்கும் முறை: வாழை கட்டுப்படுக்தப்பட்ட சூழல் பாதுகாப்பு முறைக்கு மிகவும் உகந்ததாகக் காணப்படுகிறது. இப்பாதுகாப்பு முறையில் வாழைப் பழங்களின் பழுக்கும் தன்மை மற்றும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வெகுவாக கெடும் சூழல் குறைக்கப் படுகிறது. எனவே வாழை ஏற்றுமதியின்போது நீண்ட கடல் பயணத்தின்போதுகூட கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு முறையில் பழுக்காத வாழைப் பழங்களை 75 நாள்கள் வரை சேமித்து வைக்க முடியும், பின்னர் தகுந்த சூழலில் வைத்தால் 4 முதல் 5 நாள்களில் நன்றாக பழுக்க வைக்க முடியும்.

 
         இவ்வாறு இப்புதிய சேமிப்பு முறைகள் வாயிலாக வாழைப் பழத்தை சேமித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை நிறைவு செய்து வாழை விவசாயிகள் மற்றும் வாழை வியாபாரிகள் அதிகளவு லாபம் அடைய முடியும் என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீன்.






Read more »

வியாழன், மே 26, 2011

வாழையில் பின்செய் நேர்த்தி முறைகள்

குலை தள்ளிய வாழைமரம்.
                வாழை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தைப் பக்குவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும். வாழை நட்டப் பிறகு சில பராமரிப்புப் பணிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் மகசூல் அதிகம் பெற முடியும்.எல்லா பயிர்களையும் போலவே வாழையிலும் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் இருக்கிறது. 
அதைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் எடுப்பது எப்படி என்பதை விளக்குகிறார் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார்: அவர் கூறியது: 
              வாழையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மண்வெட்டியால் கொத்தி மண் அணைக்க வேண்டும்.பக்கக் கன்றுகளை மாதம் ஒரு முறை நீக்க வேண்டும். இலைக்காகச் சாகுபடி செய்யப்படும் பூவன், கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் ரகங்களில் முதல் மூன்று அல்லது நான்கு பக்கக் கன்றுகளை வளர விடலாம்.பக்கக் கன்றுகளைக் கத்தி கொண்டு வெட்டி அழிக்கலாம். மீண்டும் மீண்டும் துளிர்த்தால் பக்கக் கன்றுகளின் நடுக்குருத்தில் ஒரு கன்றுக்கு இரு சொட்டுகள் மண்ணெண்ணையைக் கவனமாக இங்க் ஃபில்லர் கொண்டு விட்டும் அழிக்கலாம். அதிக சொட்டுகள் மண்ணெண்ணைய் விட்டால் தாய்க்கன்றுகள் இறந்து விடும். கடைசி பூ அல்லது சீப்பு வெளிவந்த ஒரு வாரத்தில் ஆண் பூவை ஒடித்து விடவேண்டும். 

               பிறகு, 10 கிராம் யூரியா தொட்டுக் கொண்டிருக்கும்படி ஒடித்த இடத்தில் உள்ள காம்பு பகுதியில் ஒரு பாலித்தீன் பையில் போட்டு கட்டி விட வேண்டும். இதனால் சத்துக்கள் அனைத்தும் காய்களுக்கு செல்வதால் வாழைக்காய்கள் சீக்கிரம் முதிர்ச்சியடைகிறது.வாழைக்காய்களின் பருமனை அதிகரிக்க ஒரு கிராம் 2, 4 டி மருந்தை 20 மிலி எரிசாராயத்தில் கரைத்து பின் அத்துடன் 40 லிட்டர் தண்ணீர் கலந்து 200 தார்களில் பூவின் கடைசி மடல் விரிந்ததும் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். வாழையில் விதைப் பிடிப்பின்மை, நீண்ட சதைப் பற்றுள்ள காய் மற்றும் அதிக காய்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்க, பயிர் வளர்ச்சி ஊக்கி சைட்டோசைம் 180 மி.லியை 180 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் ஏக்கர் வாழை மரங்களில் நடவு செய்த 90 மற்றும் 120 வது நாட்களில் விசைத்தெளிப்பான் கொண்டு அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் தெளிக்க வேண்டும்.

               வடிகால் வசதியில்லாத நீர்ப் பிடிப்பு தன்மை அதிகமாக உள்ள வாழை வயலில் ஒரு வாழை மரத்துக்கு யூரியா அல்லது அமோனியம் சல்பேட் 25 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் மூலம் மரங்கள் மீது நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.வறட்சியான சமயங்களில், ஒரு வாழை மரத்திற்கு டை பொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் கொண்டு இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். வாழைத் தார் நன்கு பெருக்க, பொட்டாசியம் சல்பேட் 20 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தார் மீது நன்கு படும்படி தெளித்தல் அவசியம். 

               வாழைத்தார் நன்கு பெருக்க, ஒரு மரத்துக்கு யூரியா 350 கிராம் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஷ் 250 கிராம் வேர்ப்பகுதியில் மண்ணில் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.காய்களின் முதிர்ச்சிக்கு மிக முக்கியமான கண்ணாடி மற்றும் முதல் மூன்று இலைகளைக் கொண்டு தாரை மூடுவதை தவிர்ப்பது எடை அதிகமான தார்களை உண்டாக்கும். இதற்குப் பதிலாக, வாழைக்காய்கள் வெப்பத்தினால் வெடிக்காமல் இருக்க வாழைத்தாரை காய்ந்த இலைகள் கொண்டோ அல்லது பாலித்தீன் பைகள் கொண்டோ மூட வேண்டும். 

             வாழை குலை தள்ளும் சமயம், மறுதாம்பு பயிருக்கு ஒரு வீரிய கன்றை ஒதுக்கிவிடவேண்டும். காற்றடிக்கும் நேரங்களில், மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க திடமான கம்பு கொண்டு எதிர்புறமாக முட்டுக் கொடுக்க வேண்டும்.காய்ந்த இலை மற்றும் நோய் தாக்கிய இலைகளை அவ்வப்போது அகற்றி எரிப்பதால் வயலை நோய், பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். காய்களின் நுனியில் ஒட்டியிருக்கும் பூவின் எஞ்சிய பாகத்தை நீக்குவதால் நோய் பரவுதலை தடுக்க முடியும். குலை வெட்டிய பின்பு, இலையில் வெட்டுப்பாகத்தில் வாசலின் அல்லது களிமண் கொண்டு பூச வேண்டும். 

             குலை வெட்டிய தாய் வாழைகளை கிழங்குகளுடன் அகற்றி இயற்கை உரமாக தயாரிக்கலாம்.குலை வெட்டிய தாய் வாழை மரங்களின் பட்டைகளிலிருந்து வாழை நார் எடுத்து வணிகச் சந்தைக்கு அனுப்பலாம்.நன்செய் நில வாழையில் ஒவ்வொரு வரிசை விட்டு கால்வாய்கள் எடுக்க வேண்டும். மேலும், ஐந்து வரிசைகளுக்கிடையில் குறுக்கு கால்வாய்கள் எடுக்க வேண்டும். நல்ல மகசூல் பெறுவதற்கு, ஒரு வாழை மரத்தில் 10 முதல் 12 பச்சை இலைகள் இருக்க வேண்டும். கூடுதல் வருமானம் கிடைக்கவும், களைகளைக் கட்டுப்படுத்தவும் வாழையில் ஊடுபயிராக மணிலா, உளுந்து, தட்டைப்பயிர், மொச்சை, சோயா மொச்சை, மிளகாய், கிழங்கு வகைகள், பூ வகைகள், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம்.கொடிவகை காய்கறிகளான பூசணி, தர்பூசணி, பரங்கி, வெள்ளரி, பாகல், சுரை மற்றும் புடலை போன்றவற்றை வாழையில் ஊடுபயிர்களாகப் பயிரிடக்கூடாது.

                ஏனெனில், இக்கொடி வகைக் காய்கறிகளில் ஏற்படும் ஒரு வகை வைரஸ் நச்சுயிரி நோய், வாழைக்கு பரவும் அபாயம் உள்ளது.வாழையைத் தாக்கும் ஆப்பிரிக்க நத்தை பூச்சி பப்பாளி, தக்காளி, பலா, சம்பங்கி, சாமந்தி, ரப்பர், பாக்கு, காப்பி, தேயிலை, நெல், காய்கறி மற்றும் கோகோ பயிர்களைத் தாக்குவதால் இந்தப் பயிர்களை எக்காரணம் கொண்டும் வாழையில் ஊடுபயிராகப் பயிரிடக்கூடாது.



Read more »

வியாழன், மே 05, 2011

வாழைச் சாகுபடிக்கு 65% அரசு மானியம்


திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ள வாழைக் கன்றுகள்.
 
விருத்தாசலம்: 

           நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் கோமுகி நதி உபவடி நிலப் பகுதியில் வாழைச் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு அரசு 65 சதவீத மானியம் வழங்குகிறது.

இதுகுறித்து விருத்தாசலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் பேராசியர் கா.சுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் ஆகியோர் தெரிவித்தது:

                தமிழகத்தில் உள்ள 63 ஆற்றுப்படுகை பகுதியில் விவசாயப் பாசனப் பரப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் நீர்வள, நிலவள திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இதன்கீழ் விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கோமுகி நதி பாயும் விளை நிலங்களில் வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் 65 சதவீத மானியத்தை வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு மானியமாக வழங்குகிறது. 

வாழை சாகுபடிக்கு ஏற்ற மண்ணின் தன்மை: 

                வாழை பயிரிடுவதற்கு நல்ல வடிகால் வசதியுடைய அமில, காரத் தன்மை 5.5-7.5 வரையுள்ள மண் சிறந்ததாகும். காரத் தன்மை மிக அதிகமாக உள்ள உப்பு கலந்த களிமண் வாழைப் பயிருக்கு ஏற்றதல்ல. இத்தகைய மண்ணில் நுண்ணூட்டச் சத்துகள், மணிச்சத்து வாழைச் செடிக்கு எளிதில் கிடைப்பதில்லை. மேலும் சுண்ணாம்பு கற்கள் அதிகமுள்ள மண்ணாக இருப்பின் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை செடி வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்தே தெரியவரும்.

திசு வாழை: 

              திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை தேர்வு செய்து நடும்போது ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்ய வேண்டும். திசு வாழைக் கன்றுகளை ஜனவரி முதல் மே வரையிலான காலங்களில் நடவு செய்தால் பாக்டீரியா நோய், வைரஸ் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதுடன் செடியின் வளர்ச்சியும் குறைந்து சில நேரங்களில் 5 மாதத்துக்கு உள்ளேயே குலை தள்ளும் நிலை உருவாகும்.

திசு வளர்ப்பு கன்றுகளை தேர்வு செய்யும் முறை: 

            திசு வாழைக் கன்றுகளை தேர்வு செய்யும் போது 5 முதல் 6 இலைகள் உள்ள நன்கு வளர்ந்த செடிகளை தேர்வு செய்ய வேண்டும். நோய் தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான வாழைத் தோப்பில் 1.5 முதல் 2 கிலோ எடையுள்ள கன்றுகளை தேர்வு செய்து வேர்கள், அழுகிய பகுதிகளை நீக்கிவிட்டு கிழங்கிலிருந்து 20 செ.மீ. அளவுக்கு மேல்புறம் விட்டுவிட்டு மீதமுள்ள பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 0.1 சதவீதக் கரைசலில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த 4 பங்கு களிமண், 5 பங்கு நீருடன் சேர்த்து கரைத்த சேற்றில் கன்றுகளை நனைத்து ஒரு கன்றுக்கு 40 கிராம் என்ற அளவில் கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை கன்றில் தூவி பின்னர் நடவு செய்ய வேண்டும்.

நடவு முறை: 

            நடவு வயலை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும் பின்னர் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழவு செய்ய வேண்டும். பின் கொக்கிக் கலப்பை கொண்டு 2 முறை உழவு செய்ய வேண்டும். நடவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு 1.5க்கு 1.5க்கு 1.5 அளவுள்ள குழிகளை 6க்கு 6 அடி அல்லது 5க்கு 7 அடி இடைவெளியில் எடுக்கவேண்டும். குழிக்கு 5 கிலோ அளவுக்கு தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து குழிக்குள் இட வேண்டும். அத்துடன் வேப்பம்புண்ணாக்கு 500 கிராம் மற்றும் பியூரடான் 20 கிராம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். 1 ஹெக்டேரில் நடவு செய்ய குறைந்தபட்சம் 3 ஆயிரம் வாழைக் கன்றுகள் வேண்டும்.

Read more »

வியாழன், ஏப்ரல் 21, 2011

திசு வாழை பயிர் சாகுபடி முறை

            திசு வாழை பயிரிட்டால் ஹெக்டேருக்கு ரூ.2.50 லட்சம் வரை நிகர லாபம் பெறலாம் என்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.  

               தோட்டப் பயிர்களில் மிக முக்கியமான பழவகைப் பயிர் வாழை. வாழைப்பழம் உணவுப் பொருளாகவும், மருத்துவ குணம் வாய்ந்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.  தமிழகத்தில் பலவகையான வாழை ரகங்கள் மாவட்டங்களுக்கேற்ப உற்பத்தி முறைகளுக்குத் தகுந்தால் போல் பயிரிடப்படுகின்றன.  இவற்றில் பச்சை வாழை ரகங்கள் மட்டும் 50 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பூவன், ரஸ்தாளி, நெய்பூவன், நேந்திரன், மொந்தன் செவ்வாழை, கற்பூரவள்ளி போன்ற ரகங்களும் பயிரிடப்படுகின்றன.  


             இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 743 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் மொந்தன் வாழை மட்டும் சுமார் 60 சதவீத பரப்பளவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தி திறன் சராசரியாக ஹெக்டேருக்கு 47.74 மெ.டன் ஆகும். மொந்தன் வாழை சாகுபடியில் ஹெக்டேருக்கு ரூ.1.50 லட்சம் வரை தற்சமயம் விவசாயிகள் நிகர லாபமாக பெற்று வருகின்றனர்.   ஆனால் வளர்ந்து வரும் மக்கள்தொகை தேவைக்கேற்ப தற்சமயம் உள்ள உற்பத்தித் திறனை பெருக்குதலும், அதற்காக உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகிறது.  

            தரமான உற்பத்திக்கும், அதிக உற்பத்திக்கும் அதாவது சராசரியாக ஹெக்டேருக்கு 100 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்வதற்கும் திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை உபயோகித்தல், சொட்டுநீர் உர பாசன முறைகளை பயன்படுத்துதல் போன்ற கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை தற்சமயம் பின்பற்றுதல் மிகவும் முக்கியமான தீர்வாக உள்ளது.  திசு வாழை சாகுபடியில் நன்கு கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை கையாளும் விவசாயிகள் கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்தாலும், ஹெக்டேரில் ரூ.2.50 லட்சத்துக்கும் மேல் நிகர லாபமாக பெருவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.  

           இந்தப் பயன் எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட தோட்டக்கலைத் துறை மூலம் தரமான திசு வாழைச் செடிகள் மாவட்டத்தின் கோலியனூர், காணை, கண்டமங்கலம், கள்ளக்குறிச்சி, திருவெண்ணைய்நல்லூர், வானூர் போன்ற ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ÷இதற்கான கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளும் மாவட்டத்திலுள்ள திசு வாழை சாகுபடியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

            மேலும் திசு வாழைக்கு காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தவிர்க்க வாழை சாகுபடி செய்யும் வயல்களின் ஓரத்தில் அகத்தியை ஓரப்பயிராக இருவரிசைகளில் சாகுபடி செய்து காற்றின் வேகத்தை குறைப்பதன் மூலம் காற்றினால் வாழைக்கு ஏற்படும் சேதாரத்தை தவிர்க்கலாம்.  

இந்த திசு வாழை பயிரிட ஏற்ற காலம் குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் என். பன்னீர்செல்வம் கூறியது:  

            திசு வாழை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நமது மாவட்டத்தில் திசு வாழை செடிகளை நடவு செய்து, கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை கையாண்டு அதிக உற்பத்தி மற்றும் அதிக லாபம் மூலம் வீட்டுக்கும், நாட்டுக்கும் நலம் மற்றும் வளம் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  சொட்டுநீர் உர பாசன முறையில் திசு வாழை செடிகளை பருவத்தே நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் ஒன்றியத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior