உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், மே 05, 2011

வாழைச் சாகுபடிக்கு 65% அரசு மானியம்


திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ள வாழைக் கன்றுகள்.
 
விருத்தாசலம்: 

           நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் கோமுகி நதி உபவடி நிலப் பகுதியில் வாழைச் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு அரசு 65 சதவீத மானியம் வழங்குகிறது.

இதுகுறித்து விருத்தாசலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் பேராசியர் கா.சுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் ஆகியோர் தெரிவித்தது:

                தமிழகத்தில் உள்ள 63 ஆற்றுப்படுகை பகுதியில் விவசாயப் பாசனப் பரப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் நீர்வள, நிலவள திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இதன்கீழ் விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கோமுகி நதி பாயும் விளை நிலங்களில் வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் 65 சதவீத மானியத்தை வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு மானியமாக வழங்குகிறது. 

வாழை சாகுபடிக்கு ஏற்ற மண்ணின் தன்மை: 

                வாழை பயிரிடுவதற்கு நல்ல வடிகால் வசதியுடைய அமில, காரத் தன்மை 5.5-7.5 வரையுள்ள மண் சிறந்ததாகும். காரத் தன்மை மிக அதிகமாக உள்ள உப்பு கலந்த களிமண் வாழைப் பயிருக்கு ஏற்றதல்ல. இத்தகைய மண்ணில் நுண்ணூட்டச் சத்துகள், மணிச்சத்து வாழைச் செடிக்கு எளிதில் கிடைப்பதில்லை. மேலும் சுண்ணாம்பு கற்கள் அதிகமுள்ள மண்ணாக இருப்பின் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை செடி வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்தே தெரியவரும்.

திசு வாழை: 

              திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை தேர்வு செய்து நடும்போது ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்ய வேண்டும். திசு வாழைக் கன்றுகளை ஜனவரி முதல் மே வரையிலான காலங்களில் நடவு செய்தால் பாக்டீரியா நோய், வைரஸ் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதுடன் செடியின் வளர்ச்சியும் குறைந்து சில நேரங்களில் 5 மாதத்துக்கு உள்ளேயே குலை தள்ளும் நிலை உருவாகும்.

திசு வளர்ப்பு கன்றுகளை தேர்வு செய்யும் முறை: 

            திசு வாழைக் கன்றுகளை தேர்வு செய்யும் போது 5 முதல் 6 இலைகள் உள்ள நன்கு வளர்ந்த செடிகளை தேர்வு செய்ய வேண்டும். நோய் தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான வாழைத் தோப்பில் 1.5 முதல் 2 கிலோ எடையுள்ள கன்றுகளை தேர்வு செய்து வேர்கள், அழுகிய பகுதிகளை நீக்கிவிட்டு கிழங்கிலிருந்து 20 செ.மீ. அளவுக்கு மேல்புறம் விட்டுவிட்டு மீதமுள்ள பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 0.1 சதவீதக் கரைசலில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த 4 பங்கு களிமண், 5 பங்கு நீருடன் சேர்த்து கரைத்த சேற்றில் கன்றுகளை நனைத்து ஒரு கன்றுக்கு 40 கிராம் என்ற அளவில் கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை கன்றில் தூவி பின்னர் நடவு செய்ய வேண்டும்.

நடவு முறை: 

            நடவு வயலை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும் பின்னர் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழவு செய்ய வேண்டும். பின் கொக்கிக் கலப்பை கொண்டு 2 முறை உழவு செய்ய வேண்டும். நடவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு 1.5க்கு 1.5க்கு 1.5 அளவுள்ள குழிகளை 6க்கு 6 அடி அல்லது 5க்கு 7 அடி இடைவெளியில் எடுக்கவேண்டும். குழிக்கு 5 கிலோ அளவுக்கு தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து குழிக்குள் இட வேண்டும். அத்துடன் வேப்பம்புண்ணாக்கு 500 கிராம் மற்றும் பியூரடான் 20 கிராம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். 1 ஹெக்டேரில் நடவு செய்ய குறைந்தபட்சம் 3 ஆயிரம் வாழைக் கன்றுகள் வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior