உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

கழிவுநீர் தேங்குவதால் திறக்க முடியாத பள்ளி வகுப்பறைகள்

பண்ருட்டி,நவ.18:

பண்ருட்டி அய்யனார் கோயில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் 15 நாள்களாக பள்ளி திறக்கப்படாமல், பழைய கட்டடத்திலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன.
பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில், அய்யனார் கோயில் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 160-ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இதன் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிகள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதுடன், இங்கு கழிவு நீர் கால்வாய்கள் முறையாக அமைக்காததாலும், கால்வாய்களை பராமரிக்காததாலும் மழைக் காலத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் பள்ளி வளாகத்தை சூழ்ந்து மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அண்மையில் பெய்த மழையால் பள்ளி வளாகம் முழுவதும் நீர் சூழ்ந்ததால், கடந்த 15 நாள்களாக முருகன் கோயில் அருகில் உள்ள பழைய வகுப்பறை கட்டடத்தில் இட நெருக்கடியில் அனைத்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அவதி அடைகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள இப்பள்ளியின் நிலை குறித்து நக ர நிர்வாகத்திடம் பல முறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள் அதிக அளவில் படிக்கும் இப்பள்ளியை, நகர நிர்வாகம் சீரமைத்து சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான முறையில் மாணவர்கள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி,நவ.18:

மின்சாரக் கோளாறு காரணமாக பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள உயர்கோபுர விளக்கு, சிக்னல் புதன்கிழமை எரியாமல் இருள் சூழ்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் அவதி அடைந்தனர்.
நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வியாபார மற்றும் பணி நிமித்தமாக பண்ருட்டி வந்து செல்கின்றனர். இதனால் நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
மேலும் கடலூர்-சித்தூர், சென்னை-கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலைகள் நான்கு முனை சந்திப்பை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால் இச்சந்திப்பில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. காலை, மாலை வேளையில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.
இத்தகைய முக்கியம் வாய்ந்த நான்கு முனை சந்திப்பில் பொறுத்தப்பட்டுள்ள உயர்கோபுர விளக்கும், அண்மையில் அமைக்கப்பட்ட சிக்னலும் மின்சார கோளாறு காரணமாக புதன்கிழமை எரியவில்லை. இதனால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் அப்பகுதியைக் கடந்து செல்ல பெரும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸôர் சிக்னல் இன்டிகேட்டர் இன்றி இருளில் போக்குவரத்தை சரி செய்ய படாதபாடு பட்டனர்.

Read more »

நவம்பர் 20ல் வடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்,நவ. 18:

தி.மு.க. சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வடலூரில் நவம்பர் 20,21,22 தேதிகளில் நடைபெறும் என்று கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை அறிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் கலைஞரின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு (18 வயது முதல் 35 வயது வரை) கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பைப் பெற்றுதரும் நோக்கில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
ஏற்கெனவே பதிவு செய்து அடையாள அட்டை பெற்று உள்ளவர்களுக்கு மட்டும் நேர்முக் தேர்வு நடைபெற இருக்கிறது. 20, 21, 22 ஆகிய தேதிகளில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 300 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இசைவு தந்துள்ளனர். இதுவரை இந்த நிறுவனங்கள் 52 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை அளிக்க முன்வந்துள்ளன.
இதில் காக்னிஸண்ட், இன்போசிஸ் பி.பி.ஓ. போலரிஸ் மென்பொருள் நிறுவனம், போர்டு இந்தியா, விப்ரோ, ஹுண்டாய். நோக்கியா, ரிலையன்ஸ், செயின்ட் கோபெயின், டி.வி.எஸ்., எச்.சி.எல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அடங்கும்.
வடலூர் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்துகொள்கிறார். ஏற்கெனவே பதிவு அட்டை பெற்றவர்களில், நவம்பர் 20-ம் தேதி ஏ பிரிவினருக்கும், 21-ம் தேதி பி பிரிவினருக்கும், 22-ம் தேதி சி பிரிவினருக்கும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior