உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

டெல்டா பாசனப் பகுதிகளில் செம்மை நெல் சாகுபடிக்கு இயந்திரங்கள் பற்றாக்குறை


நாற்று நடும் இயந்திரம்.
 
கடலூர்:

              நவீன அறிவியல் வேளாண்மையில் டெல்டா பாசனப் பகுதிகளில், செம்மை நெல் சாகுபடிக்குத் தேவையான இயந்திரங்கள் இந்த சம்பா பருவத்தில் கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

                 தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனத்தை நம்பி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள், டெல்டா பாசனப் பகுதிகள். சம்பா சாகுபடிக்கு ஜூலை 29-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டக் காவிரி பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி கொள்ளிடம் கீழணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் பிபிடி, வெள்ளைப் பொன்னி, சின்னப்பொன்னி, பொன்மணி, ஏடிடி 38, சிஆர். 1009 உள்ளிட்ட நடுத்தர நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

               கடலூர் மாவட்டக் காவிரி டெல்டா பகுதிகளில் மேட்டுப் பாங்கான சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் செம்மை நெல் சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது.வேளாண் தொழில்களுக்கு ஆள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், செம்மை நெல் சாகுபடியை வரவேற்கும் விவசாயிகள், அதற்குத் தேவையான இயந்திரங்கள் இல்லையே என்று கவலை தெரிவிக்கிறார்கள். டெல்டா பாசனப் பகுதிகளில் 30 விவசாயிகளிடம் மட்டுமே நடவு இயந்திரங்கள் (ரூ.2.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை) இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 166 வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் 5-ல் கடந்த ஆண்டு நடவு இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இந்த ஆண்டு மேலும் 7 கூட்டுறவு சங்கங்களுக்கு நடவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

                செப்டம்பர் இறுதிக்குள் இயந்திரங்கள் வாங்கப்பட்டுவிடும். வேளாண் கருவிகளை இயக்க சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று, கூட்டுறவு இணை இயக்குநர் வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சம்பா நெல் விதைகள் மொத்த தேவையில் 17 சதவீதத்தை அரசு விநியோகிக்க வேண்டும் என்பது விதி. வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் தேவையான விதை நெல் இருப்பு வைத்து இருப்பதாக வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல் விலை கிலோ பிபிடி ரகம் ரூ.23-36, சிஆர்.1009 ரூ.18-75, வெள்ளைப் பொன்னி ரூ.20-40. விதை நெல்லுக்கு வேளாண் விரிவாக்க மையங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. 

இதுபற்றி பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

           "செம்மை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகிவிட்டனர். ஆனால் அதற்குத் தேவையான இயந்திரங்கள் போதுமானதாக இல்லை. தற்போதுள்ள இயந்திரங்களைக் கொண்டு 10 சதவீத வேளாண் பணிகளைத்தான் செய்ய முடியும். நடவு இயந்திரம் மட்டும் இந்த மாவட்டத்துக்கு 800க்கும் மேல் தேவைப்படுகிறது. அரசு தேவையான இயந்திரங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.கடந்த ஆண்டு வழங்கியதுபோல் இந்த ஆண்டும், விதை நெல்லுக்கு மத்திய அரசு மானியம் கிலோவுக்கு ரூ.2 வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விநியோகிக்கும் விதை நெல்லுக்கும் மாநில அரசு மானியம் ரூ.5 வழங்க வேண்டும். மேட்டூர் அணை ஜூலை 29-ம் தேதி திறக்கப்பட்டும், திறக்கப்படும் நீரின் அளவைக் குறைத்து விட்டனர். இதனால் வேளாண் பணிகளுக்கு நீர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். 

                   வடகிழக்குப் பருவமழை செப்டம்பர் 20-ல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென் மேற்குப் பருவமழையும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாசனத்துக்கு போதிய தண்ணீரைத் திறக்காமல், மேட்டூர் அணையில் தொடர்ந்து நீரைத் தேக்கி வைப்பதால் என்ன பயன்? பராமரிப்புப் பணிகள் முடிவடையாததே போதிய தண்ணீர் திறக்கப்படாமைக்குக் காரணம்' என்றார்.

Read more »

தமிழக நதிகளை இணைக்க ரூ.600 கோடியில் திட்டம்

               தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டம் முதல் கட்டமாக ரூ.600 கோடியில் செயல்படுத்த உள்ளதாக மாநில பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.ராமசுந்தரம் தெரிவித்தார்.

மதுரையில்  செவ்வாய்க்கிழமை மாநில பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.ராமசுந்தரம்   அளித்த பேட்டி:

               தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் கருணாநிதி பெருமுயற்சி எடுத்து வருகிறார். இதையடுத்து முதல் கட்டமாக தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய மூன்றையும் இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்குத் தேவைப்படும் நிலத்தை விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து அரசுக்கு அளித்துள்ளனர்.அடுத்த கட்டமாக காவிரி, வைகை, குண்டாறு ஆகிய மூன்றையும் இணைக்கும் திட்டம் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு தேவைப்படும் நிலமும் கையகப்படுத்தப்படும். அநேகமாக இப்பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும். மேலும் செய்யாறு-பாலாறு நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 

               இப்பணியைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.இந்த  மூன்று திட்டங்களும் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.600 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவைடைய 5 ஆண்டுகளாகும். மேற்குறிப்பிட்ட நதிகளை இணைத்த பின் நதிகள் அனைத்தையும் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அப்பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும். மொத்தத்தில் நதிகளை இணைக்கும் திட்டம் நிறைவடைய 8 அல்லது 9 ஆண்டுகளாகும்.மேலும் வைகை அணையைத் தூர்வாரி, சீரமைக்க ரூ.175 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.கரூர் அருகே கட்டளை கதவணையை நவீனப்படுத்தி மதகு அணை கட்ட ரூ.190 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைந்துவிடும். காவிரியில் வெள்ள அபாயம் ஏற்படும் சமயங்களில் வெள்ள நீர் புகுந்துவிடுவதால் காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. 

                இதைத் தடுக்கும் நோக்கில் இந்த மதகு அணை கட்டப்பட்டு வருகிறது.தமிழகம், ஒரிசா, கேரளம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அணைகள் புனரமைப்புத் திட்டம் ரூ.750 கோடியில் செயல்படுத்த திட்டம் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மட்டும் மேட்டூர், பவானிசாகர், வைகை உள்ளிட்ட 104 அணைகள் புனரமைக்கப்பட உள்ளன .மதுரை வண்டியூர் கண்மாய் சீரமைப்பு தொடர்பாக ரூ.22 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரால் அரசின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மதுரை மாநகராட்சி, சுற்றுலாத்துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவை செயல்படுத்த முன்வந்துள்ளன. 

                   இவர்களில் யாரிடம் இப்பணியை ஒப்படைப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.பேட்டியின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், ராமநாதபுரம் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், சிவகங்கை ஆட்சியர் மகேசன் காசிராஜன், விருதுநகர் ஆட்சியர் வி.கே.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

கடலூரில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது

கடலூர்:

             முறையாக மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த, உலக மக்கள் தொகைக் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பேசியது:

              முன்பு குடும்பக் கட்டுப்பாடு திட்டமாக இருந்தது; தற்போது குடும்ப நலத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் 1,2,3 என்ற விகிதத்தில் இல்லாமல் 2,4,8,16 என்ற விகிதத்தில் இருப்பது பிரச்னையாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பிறப்பு விகிதம் 14.2 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 5.3 சதவீதமாகவும் உள்ளது. சுகாதார நடவடிக்கைகளால் கடலூர் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.÷கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரூ.1800 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கும் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 1,56,414 வீடுகள் கட்டப்படும்.

              கடலூர் லாரன்ஸ் சாலையில் சுரங்கப் பாதை திட்டம் நிச்சயம் வரும். இத்திட்டத்துக்கு அனுமதி அளித்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் 31-7-2010 அன்று கையொப்பமிட்டு உள்ளார். ரயில்வே இலாகாவும் டெண்டர் விட இருக்கிறது.  இச்சுரங்கப் பாதை 16.5 மீட்டர் அகலம், 300 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என்றார் ஆட்சியர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். விழாவில் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior