உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

டெல்டா பாசனப் பகுதிகளில் செம்மை நெல் சாகுபடிக்கு இயந்திரங்கள் பற்றாக்குறை


நாற்று நடும் இயந்திரம்.
 
கடலூர்:

              நவீன அறிவியல் வேளாண்மையில் டெல்டா பாசனப் பகுதிகளில், செம்மை நெல் சாகுபடிக்குத் தேவையான இயந்திரங்கள் இந்த சம்பா பருவத்தில் கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

                 தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனத்தை நம்பி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள், டெல்டா பாசனப் பகுதிகள். சம்பா சாகுபடிக்கு ஜூலை 29-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டக் காவிரி பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி கொள்ளிடம் கீழணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் பிபிடி, வெள்ளைப் பொன்னி, சின்னப்பொன்னி, பொன்மணி, ஏடிடி 38, சிஆர். 1009 உள்ளிட்ட நடுத்தர நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

               கடலூர் மாவட்டக் காவிரி டெல்டா பகுதிகளில் மேட்டுப் பாங்கான சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் செம்மை நெல் சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது.வேளாண் தொழில்களுக்கு ஆள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், செம்மை நெல் சாகுபடியை வரவேற்கும் விவசாயிகள், அதற்குத் தேவையான இயந்திரங்கள் இல்லையே என்று கவலை தெரிவிக்கிறார்கள். டெல்டா பாசனப் பகுதிகளில் 30 விவசாயிகளிடம் மட்டுமே நடவு இயந்திரங்கள் (ரூ.2.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை) இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 166 வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் 5-ல் கடந்த ஆண்டு நடவு இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இந்த ஆண்டு மேலும் 7 கூட்டுறவு சங்கங்களுக்கு நடவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

                செப்டம்பர் இறுதிக்குள் இயந்திரங்கள் வாங்கப்பட்டுவிடும். வேளாண் கருவிகளை இயக்க சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று, கூட்டுறவு இணை இயக்குநர் வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சம்பா நெல் விதைகள் மொத்த தேவையில் 17 சதவீதத்தை அரசு விநியோகிக்க வேண்டும் என்பது விதி. வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் தேவையான விதை நெல் இருப்பு வைத்து இருப்பதாக வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல் விலை கிலோ பிபிடி ரகம் ரூ.23-36, சிஆர்.1009 ரூ.18-75, வெள்ளைப் பொன்னி ரூ.20-40. விதை நெல்லுக்கு வேளாண் விரிவாக்க மையங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. 

இதுபற்றி பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

           "செம்மை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகிவிட்டனர். ஆனால் அதற்குத் தேவையான இயந்திரங்கள் போதுமானதாக இல்லை. தற்போதுள்ள இயந்திரங்களைக் கொண்டு 10 சதவீத வேளாண் பணிகளைத்தான் செய்ய முடியும். நடவு இயந்திரம் மட்டும் இந்த மாவட்டத்துக்கு 800க்கும் மேல் தேவைப்படுகிறது. அரசு தேவையான இயந்திரங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.கடந்த ஆண்டு வழங்கியதுபோல் இந்த ஆண்டும், விதை நெல்லுக்கு மத்திய அரசு மானியம் கிலோவுக்கு ரூ.2 வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விநியோகிக்கும் விதை நெல்லுக்கும் மாநில அரசு மானியம் ரூ.5 வழங்க வேண்டும். மேட்டூர் அணை ஜூலை 29-ம் தேதி திறக்கப்பட்டும், திறக்கப்படும் நீரின் அளவைக் குறைத்து விட்டனர். இதனால் வேளாண் பணிகளுக்கு நீர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். 

                   வடகிழக்குப் பருவமழை செப்டம்பர் 20-ல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென் மேற்குப் பருவமழையும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாசனத்துக்கு போதிய தண்ணீரைத் திறக்காமல், மேட்டூர் அணையில் தொடர்ந்து நீரைத் தேக்கி வைப்பதால் என்ன பயன்? பராமரிப்புப் பணிகள் முடிவடையாததே போதிய தண்ணீர் திறக்கப்படாமைக்குக் காரணம்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior