கடலூர்:
முறையாக மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த, உலக மக்கள் தொகைக் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பேசியது:
முன்பு குடும்பக் கட்டுப்பாடு திட்டமாக இருந்தது; தற்போது குடும்ப நலத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் 1,2,3 என்ற விகிதத்தில் இல்லாமல் 2,4,8,16 என்ற விகிதத்தில் இருப்பது பிரச்னையாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பிறப்பு விகிதம் 14.2 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 5.3 சதவீதமாகவும் உள்ளது. சுகாதார நடவடிக்கைகளால் கடலூர் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.÷கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரூ.1800 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கும் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 1,56,414 வீடுகள் கட்டப்படும்.
கடலூர் லாரன்ஸ் சாலையில் சுரங்கப் பாதை திட்டம் நிச்சயம் வரும். இத்திட்டத்துக்கு அனுமதி அளித்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் 31-7-2010 அன்று கையொப்பமிட்டு உள்ளார். ரயில்வே இலாகாவும் டெண்டர் விட இருக்கிறது. இச்சுரங்கப் பாதை 16.5 மீட்டர் அகலம், 300 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என்றார் ஆட்சியர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். விழாவில் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக