தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டம் முதல் கட்டமாக ரூ.600 கோடியில் செயல்படுத்த உள்ளதாக மாநில பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.ராமசுந்தரம் தெரிவித்தார்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை மாநில பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.ராமசுந்தரம் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் கருணாநிதி பெருமுயற்சி எடுத்து வருகிறார். இதையடுத்து முதல் கட்டமாக தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய மூன்றையும் இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்குத் தேவைப்படும் நிலத்தை விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து அரசுக்கு அளித்துள்ளனர்.அடுத்த கட்டமாக காவிரி, வைகை, குண்டாறு ஆகிய மூன்றையும் இணைக்கும் திட்டம் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு தேவைப்படும் நிலமும் கையகப்படுத்தப்படும். அநேகமாக இப்பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும். மேலும் செய்யாறு-பாலாறு நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இப்பணியைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.இந்த மூன்று திட்டங்களும் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.600 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவைடைய 5 ஆண்டுகளாகும். மேற்குறிப்பிட்ட நதிகளை இணைத்த பின் நதிகள் அனைத்தையும் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அப்பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும். மொத்தத்தில் நதிகளை இணைக்கும் திட்டம் நிறைவடைய 8 அல்லது 9 ஆண்டுகளாகும்.மேலும் வைகை அணையைத் தூர்வாரி, சீரமைக்க ரூ.175 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.கரூர் அருகே கட்டளை கதவணையை நவீனப்படுத்தி மதகு அணை கட்ட ரூ.190 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைந்துவிடும். காவிரியில் வெள்ள அபாயம் ஏற்படும் சமயங்களில் வெள்ள நீர் புகுந்துவிடுவதால் காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
இதைத் தடுக்கும் நோக்கில் இந்த மதகு அணை கட்டப்பட்டு வருகிறது.தமிழகம், ஒரிசா, கேரளம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அணைகள் புனரமைப்புத் திட்டம் ரூ.750 கோடியில் செயல்படுத்த திட்டம் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மட்டும் மேட்டூர், பவானிசாகர், வைகை உள்ளிட்ட 104 அணைகள் புனரமைக்கப்பட உள்ளன .மதுரை வண்டியூர் கண்மாய் சீரமைப்பு தொடர்பாக ரூ.22 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரால் அரசின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மதுரை மாநகராட்சி, சுற்றுலாத்துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவை செயல்படுத்த முன்வந்துள்ளன.
இவர்களில் யாரிடம் இப்பணியை ஒப்படைப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.பேட்டியின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், ராமநாதபுரம் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், சிவகங்கை ஆட்சியர் மகேசன் காசிராஜன், விருதுநகர் ஆட்சியர் வி.கே.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக