உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

முதல் முறையாக வேலூரில் தொடக்கம்: ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

          ஆன் லைன் மூலம் ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி, தமிழகத்தில் முதல் முறையாக வேலூரில் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. 

               தமிழக அளவில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உரிமங்கள் பெறுவதற்கான புதிய இணையதளம் தொடங்கும் பணியை, தேசிய தகவல் மையத்தோடு (நிக்) சேர்ந்து, போக்குவரத்துத்துறை ஆணையர் எம்.ராஜாராம் மேற்கொண்டார். இதையொட்டி, தற்போது புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. 

            இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு முதலில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழகத்தில் முதல் முறையாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். இதில், முதல்கட்டமாக, இந்த இணையதளத்தைக் கையாளும் வசதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

              வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 22 பள்ளிகள், குடியாத்தம் 8, வாணியம்பாடி 12 பள்ளிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் பழகுநர் உரிமம் தேவைப்படுவோர், இந்த பள்ளிகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணோடு கூடிய நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் அனைத்து சான்றுகளோடு, வட்டாரப் போக்குவரத்து அலுவலக கணினி மையத்தில் தொகையைச் செலுத்திவிட்டு, மோட்டார் வாகன ஆய்வாளரின் தேர்வுக்குச் செல்ல வேண்டும். 

             இதன் மூலம், நேரில் வந்திருந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கும் நேரம் மிச்சமாகிறது. மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இப்பணிக்கு என இருந்த 4 கணினிகளோடு கூடுதலாக, இரு கணிகளும் திங்கள்கிழமை புதிதாக இயக்கப்பட்டன. இவற்றை வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பேருந்து உரிமையாளர்கள் சங்கம், சுழற் சங்கம் ஆகியவை அளித்துள்ளன. இதனால் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற முழு நாள் செலவிட வேண்டியிருக்காது.

                   இதை அங்கீகாரமற்ற முகவர்கள் பயன்படுத்தக்கூடாது எனும் நோக்கில், பயிற்சிப் பள்ளிகளுக்கு மட்டும் அளித்திருக்கிறோம். இணையதளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு, இன்னும் ஒன்றரை மாதத்தில் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தரணி கூறினார். இந்த முறையைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 6 பெண்களுக்கு திங்கள்கிழமை ஓட்டுநர் பழகுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காளியப்பன், மாணிக்கம், செல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

புற்றுநோய், இதயநோய் சிகிச்சைக்கு விரைவில் புதிய திட்டம்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்:

          கிராமப்புற மக்களைத் தாக்கும் புற்றுநோய், இதய நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க 2 மாதத்தில் புதிய திட்டம் வர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 கடலூர் அருகே திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 62 லட்சத்தில் கட்டப்பட்ட 30 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:

            தரம் உயர்த்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். விரைவில் 5 மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் உள்ள 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணிநேரமும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட சுகாதார நிலையத்தில் எப்போதும் ஒரு மருத்துவர் இருப்பார். மற்றவற்றில் ஒரு செவிலியர் இருப்பார்.கடந்த 4 ஆண்டுகளில் 6,389 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவர்கள் நியமனத்துக்காக 25 முறை கவுன்சலிங் நடத்தப்பட்டு உள்ளது. 

           23, 24, 25 தேதிகளில், 26-வது முறையாக, 783 மருத்துவர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் நடைபெற இருக்கிறது.தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 6 ஆயிரம் வழங்குவதற்காக | 1,000 கோடி ஒதுக்கி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. இதுவரை 20 லட்சம் போருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இன்ன நோய் வந்து இருக்கிறது என்றுகூட, தெரிந்து கொள்ள முடியாத அவல நிலையிலும், அறியாமையிலும் உள்ளனர். 

              கிராமப்புற மக்களுக்காக இதயநோய், புற்றுநோய் (மார்பகப் புற்று நோய், கருப்பை  புற்றுநோய் உள்பட) ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் 2 மாதத்தில் வரஇருக்கிறது.திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை ஜெயலிலதா ஆட்சியில் நிறுத்தினார். தற்போதும் திமுக ஆட்சியில் ரூ. 1-க்கு ஒருபடி அரிசித் திட்டம், "108' ஆம்புலன்ஸ் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசை வீடுகளுக்குப் பதில் காரை வீடுகள் வழங்கும் திட்டம் என, பல நல்ல திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

                  இந்தத் திட்டங்கள் தொடர மீண்டும் கருணாநிதி முதல்வராக வரவேண்டும் என்றார் அமைச்சர்.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கைப் பாண்டியன், துணை இயக்குநர் ஆர்.மீரா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜெயவீரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Read more »

புதுதில்லி ஐஏசிஎம் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி ஒப்பந்தம்

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுதில்லி ஐஏசிஎம் ஸ்மார்ட்லைன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பட்டவகுப்புகளை தொடங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டுள்ளது.

              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக புதுதில்லி ஐஏசிஎம் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் மற்றும் எம்எஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் பட்ட வகுப்புகள், வரும் 2011-ம் கல்வி ஆண்டு முதல் தொடங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டது. 

                  துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஐஏசிஎம் நிறுவனத் தலைவர் ரவீந்திரகாயல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், ஐஏசிஎம் நிறுவன சந்தீப்குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior