ஆன் லைன் மூலம் ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி, தமிழகத்தில் முதல் முறையாக வேலூரில் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது.
தமிழக அளவில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உரிமங்கள் பெறுவதற்கான புதிய இணையதளம் தொடங்கும் பணியை, தேசிய தகவல் மையத்தோடு (நிக்) சேர்ந்து, போக்குவரத்துத்துறை ஆணையர் எம்.ராஜாராம் மேற்கொண்டார். இதையொட்டி, தற்போது புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு முதலில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழகத்தில் முதல் முறையாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். இதில், முதல்கட்டமாக, இந்த இணையதளத்தைக் கையாளும் வசதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 22 பள்ளிகள், குடியாத்தம் 8, வாணியம்பாடி 12 பள்ளிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் பழகுநர் உரிமம் தேவைப்படுவோர், இந்த பள்ளிகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணோடு கூடிய நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் அனைத்து சான்றுகளோடு, வட்டாரப் போக்குவரத்து அலுவலக கணினி மையத்தில் தொகையைச் செலுத்திவிட்டு, மோட்டார் வாகன ஆய்வாளரின் தேர்வுக்குச் செல்ல வேண்டும்.
இதன் மூலம், நேரில் வந்திருந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கும் நேரம் மிச்சமாகிறது. மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இப்பணிக்கு என இருந்த 4 கணினிகளோடு கூடுதலாக, இரு கணிகளும் திங்கள்கிழமை புதிதாக இயக்கப்பட்டன. இவற்றை வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பேருந்து உரிமையாளர்கள் சங்கம், சுழற் சங்கம் ஆகியவை அளித்துள்ளன. இதனால் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற முழு நாள் செலவிட வேண்டியிருக்காது.
இதை அங்கீகாரமற்ற முகவர்கள் பயன்படுத்தக்கூடாது எனும் நோக்கில், பயிற்சிப் பள்ளிகளுக்கு மட்டும் அளித்திருக்கிறோம். இணையதளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு, இன்னும் ஒன்றரை மாதத்தில் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தரணி கூறினார். இந்த முறையைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 6 பெண்களுக்கு திங்கள்கிழமை ஓட்டுநர் பழகுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காளியப்பன், மாணிக்கம், செல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக