உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 29, 2011

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விபரீத விளையாட்டுக்கள்

நாவல் பழம் பறிக்க, உயரமான மரத்தின் உச்சி வரை ஏறி அமர்ந்துள்ள கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.
கடலூர்:
           துள்ளித் திரியும் வயதில் பள்ளி மாணவர்கள் பலரும், சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த ஆபத்தையும் அறிந்து கொள்ளாமல், எந்த இடம் என்று சூழலைக் கூடப் பார்க்காமல் விளையாடுவது இயற்கைதான், என்றாலும் வீட்டில் இருந்து பள்ளிகளுக்குள் நுழைந்துவிட்டால், மாணவர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் உண்டு.

                  ஆனால் கற்பித்தலுடன் எங்கள் கடமை முடிந்து விட்டது என்ற எண்ணம், பல நேரங்களில் கற்றறிந்த ஆசிரியர் சமூகத்துக்கு வந்து விடுவது, இக்காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றம். கடலூரில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆபத்தை உணராமல் பள்ளிக்கு அருகில் உள்ள உயரமான மரங்களில் ஏறுவது, அன்றாட இயல்பான நிகழ்வாகி விட்டது.மரங்களில் இருந்து விழநேரிட்டால் என்னாகும் என்ற சிந்தனை மாணவப் பருவத்தில் வருவதில்லை. கடலூர் கடற்கரைச் சாலையில் அமைந்து இருப்பது நகராட்சி மேல்நிலைப் பள்ளி. 


               இங்கு பயிலும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடற்கரைச் சாலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி அங்கும் இங்கும் சுற்றித் திரிவது, பார்ப்போர் மனதைக் கலங்கச் செய்வதாக உள்ளது.மேலும் மதிய இடைவேளை நேரங்களில் மாணவர்கள் பலரும், அருகில் உள்ள நாவல் மரங்களில் அச்சமின்றி ஏறிப் பழங்களை பறித்து உண்பது, சாதாரண நிகழ்வாக உள்ளது .30 அடி உயரத்துக்கும் மேல் உள்ள இந்த மரத்தில், மாணவர்கள் ஆபத்தை உணராமல் ஏறிக்கிடப்பதை, ஆசிரியர்கள் பலரும் கண்டும் காணாதது போல் செல்வதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.

              பள்ளி வளாகத்துக்குள் நின்று பார்த்தாலே, நாவல் மரத்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு இருப்பதை, ஆசிரியர்கள் பலரும் தெரிந்து கொள்ள முடியும். இருந்தும் ஆபத்தைப் பற்றி சிறிதும் சிந்திக்காத இளம் மாணவர்களின் இச்செயலைக் கட்டுப்படுத்தாதது, அவ்வழியாகச் செல்வோருக்கு வியப்பையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.






Read more »

புவனகிரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம்: சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் திறந்து வைக்கிறார்

சிதம்பரம:

            சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் சனிக்கிழமை (30-ம் தேதி) காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது.  

             புதிய ஏ.டி.எம். மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், சமூகநலத்துறை அமைச்சருமான செல்விராமஜெயம் திறந்து வைக்கிறார் என சிதம்பரம் கிளை முதன்மை மேலாளர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வேண்டுகோளின் ஏற்று பாரத ஸ்டேட் வங்கி புவனகிரியில் இந்த ஏ.டி.எம். மையத்தை திறக்கவுள்ளது. இதன்மூலம் இந்த பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் வங்கி சேவை கிடைக்கும்.





Read more »

கடலூர் தேவன்குடியில் புதிய பழுப்பு நிலக்கரி சுரங்கம்

நெய்வேலி:

              கடலூர் மாவட்டம் தேவன்குடியில் அமையவுள்ள புதிய சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி முழுவதும், அதைப் பயன்படுத்தும் சிறிய, பெரிய நிறுவன வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் என என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.  

                மண்டல நிலக்கரி உபயோகிப்பாளர்கள் குழுவின் 2-வது கூட்டம் நெய்வேலியில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தலைமையில் நடந்தது. 

இக்கூட்டத்தில் அன்சாரி பேசுகையில், 

               என்எல்சி நிறுவனம் தனது தேவை போக எஞ்சியிருக்கும் பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்வதற்காக மேற்கொண்டுவரும் கொள்கைகளையும், நடைமுறைகளையும் விவரித்தார்.  மேலும் என்எல்சி அனல்மின் நிலையங்களுக்கு பழுப்பு நிலக்கரி வழங்குவதற்காகத் தான், பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே தங்களது பிரதான நோக்கத்துக்காக பயன்படுத்தியது போக எஞ்சிய பழுப்பு நிலக்கரியை மட்டும் தான் பிற உபயோகிப்பாளர்களுக்கு வழங்கமுடியும். 

                 எனவே எரிபொருள் வழங்கும் ஒப்பந்தங்களை பிற நிறுவனங்களுடன் மேற்கொள்ள முடியாது என்றார்.  இருப்பினும் என்எல்சி நிறுவனம், 2-ம் சுரங்கத்தின் தென்பகுதியில் உள்ள தேவன்குடி கிராமத்தில் புதிதாக சுரங்கம் அமைக்கவிருக்கிறது. இச்சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியிலிருந்து ஆண்டுக்கு 20 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை பிற உபயோகிப்பாளர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி துவங்கியவுடன், அங்கிருந்து 5 சதவீதம் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அன்சாரி தெரிவித்தார். 

               இக்கூட்டத்தில் நிலக்கரி உபயோகிப்பாளர் குழுவைச் சேர்ந்த சி.டி.மெய்யப்பன், டி.பாணிமகேஷ், என்.ஜெயப்ரகாஷ். எஸ்.பி.சும்சுதீன், பி,ராயலு, மப்பண்ணா கஞ்ச்கிரி மற்றும் டால்மியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஏ.சங்கர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக என்எல்சி சுரங்க இயக்குநர் பி.சுரேந்தரமோகன் வரவேற்றார். விற்பனைத் துறை பொதுமேலாளர் மோகன் நன்றி கூறினார்.







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior