நாவல் பழம் பறிக்க, உயரமான மரத்தின் உச்சி வரை ஏறி அமர்ந்துள்ள கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.
கடலூர்:
துள்ளித் திரியும் வயதில் பள்ளி மாணவர்கள் பலரும், சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த ஆபத்தையும் அறிந்து கொள்ளாமல், எந்த இடம் என்று சூழலைக் கூடப் பார்க்காமல் விளையாடுவது இயற்கைதான், என்றாலும் வீட்டில் இருந்து பள்ளிகளுக்குள் நுழைந்துவிட்டால், மாணவர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் உண்டு.
ஆனால் கற்பித்தலுடன் எங்கள் கடமை முடிந்து விட்டது என்ற எண்ணம், பல நேரங்களில் கற்றறிந்த ஆசிரியர் சமூகத்துக்கு வந்து விடுவது, இக்காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றம். கடலூரில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆபத்தை உணராமல் பள்ளிக்கு அருகில் உள்ள உயரமான மரங்களில் ஏறுவது, அன்றாட இயல்பான நிகழ்வாகி விட்டது.மரங்களில் இருந்து விழநேரிட்டால் என்னாகும் என்ற சிந்தனை மாணவப் பருவத்தில் வருவதில்லை. கடலூர் கடற்கரைச் சாலையில் அமைந்து இருப்பது நகராட்சி மேல்நிலைப் பள்ளி.
இங்கு பயிலும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடற்கரைச் சாலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி அங்கும் இங்கும் சுற்றித் திரிவது, பார்ப்போர் மனதைக் கலங்கச் செய்வதாக உள்ளது.மேலும் மதிய இடைவேளை நேரங்களில் மாணவர்கள் பலரும், அருகில் உள்ள நாவல் மரங்களில் அச்சமின்றி ஏறிப் பழங்களை பறித்து உண்பது, சாதாரண நிகழ்வாக உள்ளது .30 அடி உயரத்துக்கும் மேல் உள்ள இந்த மரத்தில், மாணவர்கள் ஆபத்தை உணராமல் ஏறிக்கிடப்பதை, ஆசிரியர்கள் பலரும் கண்டும் காணாதது போல் செல்வதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.
பள்ளி வளாகத்துக்குள் நின்று பார்த்தாலே, நாவல் மரத்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு இருப்பதை, ஆசிரியர்கள் பலரும் தெரிந்து கொள்ள முடியும். இருந்தும் ஆபத்தைப் பற்றி சிறிதும் சிந்திக்காத இளம் மாணவர்களின் இச்செயலைக் கட்டுப்படுத்தாதது, அவ்வழியாகச் செல்வோருக்கு வியப்பையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக