உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 03, 2009

ஒருநாள் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காத கடலூர் நகரச் சாலைகள்

கடலூர், அக். 29:

கடலூரில் ஒருநாள் (புதன்கிழமை இரவு) பெய்த மழையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் படுமோசமாகக் காட்சி அளிக்கின்றன.
கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் தணியும் வகையில், புதன்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்தது.
ஆனால், இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் குண்டும், குழியுமாக உள்ள ஏனைய சாலைகள் அனைத்தும் திடீர் மழையால் உழுதுபோட்ட வயல்போல சகதிக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பலர் சாலைகளில் விழுந்து, சகதியில் புரளும் நிலை ஏற்பட்டது. இரு சக்கரவாகன ஓட்டிகளும் சகதியில் வழுக்கி விழுந்து சாக்கடையை உடலில் பூசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மழைக்கு முன்னரே முடிக்குமாறு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகள் எதுவும் முடிக்கப்படாதாதால் இத்தகைய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஒரு நாள் மழையிலேயே இந்நிலை என்றால், பலத்த மழை பெய்யும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போதே கடலூர் நகர மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மழைக் காலம் தொடங்கிவிட்டதால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தற்போது தொடர வாய்ப்பு இல்லை என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்காகத் தோண்டப்பட்ட மண் முழுவதும் சாலைகளில் கொட்டப்பட்டு, சாலைகளின் மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது.
இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் கூறுகையில், சாலைகள் மோசமானதால், சாலைகளின் தடுப்புக் கட்டை மேலும் மதிற்சுவர்களுக்கு மேலும் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றாததால் 50 செ.மீ. வரை சாலைகளின் மட்டம் உயர்ந்து விட்டது. புதிய சாலைகள் அமைக்கும் போது மேலும் 30 செ.மீ. உயர வாய்ப்பு உள்ளது.
எனவே, சாலைகளில் குவிக்கப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior