கடலூர் :
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் அரசு பொது மருத்துவமனையில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய "டயாலிசிஸ்' கருவியை துவக்கி வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது:
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத் தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த் தப்படும். அடுத்த கட்டமாக படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
இந்த மருத்துவ மனைகளில் 5 மருத்துவர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இம் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மூன்று செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எக்ஸ்ரே, ஸ்கேன், செமிஆட்டோ அனலைசர் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்படவுள்ளன. அனைத்து வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்க வசதியும் ஏற்படுத்தப்படும். தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் ரத்தம் சுத்திகரிப்பு செய்வதற்காக "டயாலிசிஸ்' கருவி துவக்கி வைக்கப்பட் டுள்ளது. கடலூர் மருத்துவமனையில் மகப்பேறு புறநோயாளி பிரிவு, குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவற்றிற்கு 1.50 கோடி ரூபாய் அனுமதியளிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக